Published : 30 Jun 2023 06:45 AM
Last Updated : 30 Jun 2023 06:45 AM
சென்னை: பள்ளி, கல்வி நிறுவனங்களில் டெங்கு பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கு மாறு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
கேரளாவில் தற்போது எலிக் காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது. அந்தமாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளின் காய்ச்சல் வார்டுகளில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழக எல்லையோர மாவட்டங்களில் மருத்துவக் கண்காணிப்பை பொது சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியது. தேவையான இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான சிறப்பு அறிவுறுத்தல்களை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்டசுகாதாரத் துறை அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாநிலத்தில் உள்ள அனைத்துபள்ளிகள் மற்றும் கல்லூரி வளாகங்களில் கொசு உற்பத்தியாகாமல் தடுப்பதற்கான ஆய்வை முன்னெடுத்து அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அதற்கான ஒத்துழைப்பை கல்வி நிறுவன நிர்வாகங்களும், உள்ளாட்சி அமைப்புகளும் அவசியம் வழங்க வேண்டும். பள்ளி வளாகம் முழுவதும் கொசுப் புகை மருந்து அடிக்க வேண்டும்.
அதேபோல, மேல்நிலை மற்றும்கீழ்நிலை தொட்டிகளை சுத்தமாகவும், குளோரின் கலந்தும் பராமரிக்க வேண்டும். கொசுப் புழுக்கள் அங்கு உற்பத்தியாகாத வகையில் மூடி வைப்பது முக்கியம். மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டால் உடனடியாக துணை சுகாதார இயக்குநர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன்பேரில் சிறப்பு முகாம்கள் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT