

சென்னை: இன்று ஓய்வுபெறும் தமிழக தலைமைச் செயலர் வெ.இறையன்பு, சமுதாயத்துக்காகச் செயல்பட போவதாக கூறியுள்ளார்.
1988-ல் தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தவர் வெ.இறையன்பு. 35 ஆண்டுகள் ஆட்சிப் பணியில் சிறப்பாகப் பணியாற்றியவர். பல்வேறு முக்கிய துறைகளில் உயர் பொறுப்பில் இருந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசின் தலைமைச் செயலராகப் பொறுப்பு வகித்து வருகிறார். மாவட்ட ஆட்சியர்கள், துறைகளின் செயலர்களுக்கு அவர் பல்வேறு கடிதங்களை எழுதியுள்ளார்.
அதேபோல, புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர்கள், எந்தெந்த விஷயங்களில் கவனம்செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தல் கடிதம் எழுதியுள்ளார்.
எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகத் தன்மை கொண்ட இறையன்பு இன்று பணியில் இருந்து ஓய்வுபெறுகிறார்.
இந்நிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ஓய்வுக்குப் பின் என்ன செய்யலாம் என்று இதுவரை சிந்திக்கவில்லை. முதலில் ஒரு மாதம் ஓய்வில் இருப்பேன். அதன் பின்னர், சமுதாயம் என்னை எப்படி பயன்படுத்த விரும்புகிறதோ, அதற்கேற்ப செயல்படுவேன். மாணவர்கள், இளைஞர்களின் முன்னேற்றம் குறித்து சிந்தித்து வருகிறேன்’’ என்றார்.