

சென்னை: செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய ஆளுநருக்கு திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேநேரம் ஆளுநரின் நடவடிக்கைக்கு அதிமுக வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசியல் தலைவர்கள் கூறியிருப்பதாவது:
சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு: ஆளுநருக்கு அமைச்சரை நீக்கும் அதிகாரம் கிடையாது. குற்றம் நிரூபிக்கப்பட்டு, நீதிமன்றம் தண்டனை வழங்கினாலும் பேரவை உறுப்பினர் பதவியை ரத்து செய்வதற்கு கூட பேரவைத் தலைவருக்கு தான் அதிகாரம் உள்ளது. ஆளுநர் தற்போது செய்திக்குறிப்பை மட்டும்தான் வெளியிட்டுள்ளார். இதை முதல்வர் அல்லது தலைமைச் செயலர் தான் நடைமுறைப்படுத்த முடியும். எந்த சட்டவிதிப்படி அமைச்சரை ஆளுநர் நீக்கினார் என முதல்வர் கேட்டால், அதற்குரிய பதில் ஆளுநர் தரப்பிடம் இருக்காது.
ஆளுநரின் அறிவிப்பை நடைமுறைப்படுத்த அவசியம் இல்லை என முதல்வரோ, அமைச்சரவையோ தலைமைச் செயலரிடம் கடிதம் அளித்தால் மேல் நடவடிக்கை இருக்காது. இந்த விவாதம் தலைமைச் செயலர் நிலையிலேயே முடிந்துவிடும்.
சட்ட அமைச்சர் ரகுபதி: எங்களது ஆலோசனைப்படி தான் ஆளுநர் இயங்க வேண்டும். அமைச்சர் ஒருவரை நீக்க அவருக்கு அதிகாரம் இல்லை. ஒரு அமைச்சரை வைத்துக்கொள்வதும், வைத்துக்கொள்ளாததும் முதல்வரின் விருப்பம். அமலாக்கத்துறையை பொருத்தவரை, ஆளுங்கட்சிக்கு அடிமையாக இருக்கக்கூடியவர்கள் மீது கை வைக்க மாட்டார்கள். விஜயபாஸ்கரை எப்போதோ கைது செய்திருக்க வேண்டும். ஆனால் அமலாக்கத்துறையோ, சோதனைக்கு சென்றவர்களோ நடவடிக்கை எடுக்கவே இல்லை. நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா, இல்லையா என்பதை 2024 மக்களவைத் தேர்தலில் மக்கள் முடிவு செய்வார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: ஆளுநர் அதிகார வரம்புக்கு புறம்பாக வேண்டுமென்றே மோதலே உருவாக்குகிறார். இந்த அறிவிப்பை ஆளுநர் திரும்பப் பெற வேண்டும்.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன்: ஆளுநரின் செயல்பாடுகளுக்கு மத்திய பாஜக அரசே காரணம். டெல்லி சென்றுவந்ததும் அவர்கள் சொன் னதை இங்கு செய்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: செந்தில் பாலாஜியை நீக்கியது சட்ட விரோதமானது மட்டுமின்றி, ஆளுநரின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது.
சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: நாகரிகமாக ஆளுநரை முதல்வர் அணுகி வருகிறார். நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட பிறகு இந்த அறிவிப்பையும் ஆளுநர் திரும்பப் பெறுவார்.
விசிக தலைவர் திருமாவளவன்: ஆளுநருக்கு என்ன ஆனது என்ற பரிதாபம் மேலிடுகிறது. அவர் தனது அதிகார வரம்புகளை அறியாமல் செயல்படுகிறாரா? அல்லது உள்நோக்கத்துடன் தமிழ கத்தில் அரசியல் குழப்பத்தை உருவாக்க நினைக்கிறாரா?
வரவேற்பு
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் (அதிமுக): இலாகாவை கவனிக்கத்தான் அமைச்சருக்கு அரசு செலவிடுகிறது. இலாகா இல்லாத அமைச்சருக்கு அரசு பணத்தை செலவிட தேவையில்லை. தன்னை விசாரித்தால் பல உண்மைகள் வெளியில் வரும். அதைத் தடுக்கவே, விசாரணை வளையத்தில் இருக்கும் அவர், அமைச்சர் பதவியை பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்தி வந்தார். அமைச்சர் பதவி நீக்கம் சரியான நடவடிக்கை. ஆளுநரின் முடிவு வரவேற்கத்தக்கது.
பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன்: அமைச்சர்களுக்கு கொடுக்கக் கூடிய சட்டப்பூர்வ பாதுகாப்பை பயன்படுத்தி, குற்றவாளியாக இருக்கக்கூடிய நபர் தொடர்ச்சியாக அமைச்சராக இருப்பது நியாயமான விசாரணையை பாதிக்கும்என்பதை எந்த ஒரு சாதாரண மனிதர்களும் புரிந்து கொள்வார்கள். அதன் அடிப்படையில் ஆளுநர்இந்த முடிவை எடுத்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் செம்மலை (அதிமுக): அரசியலமைப்பு சட்டத்தின் படி, ஆளுநர் ஏற்றுக்கொள்ளுகிற வரை தான் அமைச்சரவையில் ஒருவர் அமைச்சராக நீடிக்க முடியும் என்பது தெளிவு படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.