

சென்னை: கடையின் பெயர் பலகைகளுக்கு உள்ளாட்சி அமைப்புகள் கட்டணம் விதிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதன் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: வணிக நிறுவனங்களுக்கான பெயர் பலகைகளுக்கு உள்ளாட்சி அமைப்புகள் கட்டணம் விதிக்க திட்டமிட்டிருப்பதாகவும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இதற்கான ஆலோசனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியிருப்பது பேரிடியாக விழுந்திருக்கிறது.
ஏற்கெனவே வணிக கட்டிடங்கள் மீதான சொத்து வரி, வாடகை பெருமளவு உயர்த்தப்பட்டிருக்கிறது. இதோடு, இருமுறை மின்கட்டண உயர்வும் இணைந்து மேலும் நிதிச்சுமையை வணிகர்களுக்கு அதிகரித்துள்ளது. விளம்பரப் பலகைகளுக்குக் கட்டணம் விதிப்பதைப் பேரமைப்பு எதிர்க்கவில்லை.
ஆனால், உள்ளாட்சி உரிமம் பெற்று நடைபெறுகின்ற சிறு குறு வணிக கடைகள் வணிகத்துக்கான பல்வேறு உரிமம், தொழில் வரி, எடை அளவு உரிமம், உணவுப் பாதுகாப்புத் துறை உரிமம், ஜிஎஸ்டி உரிமம், தீயணைப்புத் துறை உரிமம், தொழிலாளர் நலத்துறை உரிமம், வணிக கட்டிடங்கள் மீதான வரிவிதிப்பு, வணிக மின் பயன்பாட்டுக் கட்டணம் என பல்வேறு வகைகளில் அரசுக்கு வருவாய்க்கான வழிகளில் துணை நிற்கின்றன.
வணிக பெயர் பலகை என்பது ஒரு வணிக நிறுவனத்தின் அடையாளம் மட்டுமே, அந்த அடையாளத்தின் மூலமே அந்நிறுவனத்துக்கு அரசு அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. அந்த வணிக அடையாளத்துக்குக் கட்டண விதிப்பு என்பது நீதிக்கு முரணானது. எனவே இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, பெயர் பலகைகளுக்கான கட்டண விதிப்பை உள்ளாட்சி அமைப்புகள்கைவிட அறிவுறுத்த வேண்டும் எனஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.