

கடலூர்: கடலூர் அரசு மருத்துவமனைக்கு சளி சிகிச்சைக்காக வந்த சிறுமிக்கு, நாய்க்கடி ஊசி போட்ட நர்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் அருகே உள்ள கோதண்டராமாபுரத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். இவர் கடந்த 27-ம் தேதி அவரது மூத்த மகள் சாதனாவுக்கு (13) சளி மற்றும் காய்ச்சல் இருந்ததால், கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சாதனாவை பரிசோதனை செய்த டாக்டர் அவருக்கு மருந்து, மாத்திரைகள் எழுதிக் கொடுத்துள்ளார். மேலும் ஊசி போடுவதற்கு சீட்டும் கொடுத்துள்ளார்.
அந்தச் சீட்டை ஊசி போடும் இடத்தில் இருந்த நர்ஸிடம் கருணாகரன் கொடுத்துள்ளார். அந்த நர்ஸ், சிறுமி சாதனாவுக்கு 2 ஊசிகள் போட்டுள்ளார். அப்போது அவரிடம் கருணாகரன், ‘ஏன் 2 ஊசி போடுகிறீர்கள்?’ என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த நர்ஸ், ‘நாய் கடிக்கு 2 ஊசி தான் போடுவார்கள்’ என்று கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த கருணாகரன், அதுபற்றி மீண்டும் கேட்க, நர்ஸ் மழுப்பலான பதிலைக் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி...: இந்நிலையில் வீட்டுக்குச் சென்ற சிறுமிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர் கடலூர் அரசு மருத்துவ மனையில் உள் நோயாளியாக சேர்க்கப்பட்டார். தற்போது, சாதனா அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் கருணாகரன் நேற்று முன்தினம் இது பற்றி கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட நர்ஸ் கண்ணகியை பணியிடை நீக்கம் செய்து, அரசு மருத்துவமனை இணை இயக்குநர் (பொறுப்பு) சாரா செலின்பால் உத்தரவிட்டுள்ளார்.