

ராமநாதபுரம்: மாமன்னன் திரைப்பட வெளியீட்டு விழாவின் போது, தியேட்டர் முன்பாக வைக்கப்பட்டுள்ள உதயநிதி கட் அவுட்டுக்கு, ராமநாதபுரம் நகராட்சித் தலைவர் பால் அபிஷேகம் செய்தார்.
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி நடித்த மாமன்னன் திரைப்படம், தமிழகம் முழுவதும் நேற்று வெளியிடப்பட்டது. ராமநாதபுரத்தில் டி சினிமா, ஜெகன் மற்றும் தி சினி லாஞ்ச் ஆகிய தியேட்டர்களில் இப்படம் வெளியிடப்பட்டன. இந்த படத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், திரையரங்குகள் முன் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று காலை டி சினிமா திரையரங்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள உதயநிதி கட் அவுட்டுக்கு, திமுகவைச் சேர்ந்த ராமநாதபுரம் நகராட்சித் தலைவர் கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம் ஆகியோர் பால் அபிஷேகம் செய்தனர். பின்னர், திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கினர்.
முன்னதாக, புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் உதயநிதி ரசிகர்களும் அவரது கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.