நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்  தென்காசி ஆட்சியர் ஆஜராக உத்தரவு 

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்  தென்காசி ஆட்சியர் ஆஜராக உத்தரவு 
Updated on
1 min read

மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தென்காசி ஆட்சியர், சங்கரன்கோவில் கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்த இந்து தேவேந்திர குல வேளாளர் சமுதாயத் தலைவர் சின்னசாமி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ”சிவகிரி பேரூராட்சியில் பெரியார் கடை பஜார் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் பெரியபிராட்டி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் சாதி வேறுபாடின்றி அனைத்து மக்களும் வழிபாடு நடத்தி வருகின்றனர். கோவிலின் அருகே உள்ள காலியிடத்தில் தான் திருவிழா நடைபெறும். அந்த இடத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள்.

இந்நிலையில் அந்த காலியிடத்தில் சிலர் கட்டிடம் கட்டினர். இது குறித்து புகார் அளித்ததால் பேரூராட்சி செயல் அலுவலர் நேரில் ஆய்வு செய்து கட்டுமானப் பணியை நிறுத்துமாறு உத்தரவிட்டார். அதன்படி 3 நாட்களுக்கு மட்டும் கட்டுமானப் பணியை நிறுத்தியவர்கள் தற்போது மீண்டும் கட்டுமானப் பணியை தொடங்கியுள்ளனர். எனவே, கோயில் அருகேயுள்ள புறம்போக்கு நிலத்தில் வணிகக் கட்டிடம் கட்ட தடை விதிக்க வேண்டும்.” இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் குறிப்பிடும் இடத்தில் ஆக்கிரமிப்பு இருந்தால் 8 வாரத்தில் அகற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இருப்பினும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இந்நிலையில் மனுதாரர் சின்னசாமி இறந்துவிட்டார். அவரது சார்பில் வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்கக்கோரி வாணி ஜெயராமன் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.பாஸ்கர் மதுரம் வாதிட்டார்.

பின்னர் நீதிபதிகள், "நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற அவகாசமும் கோரவில்லை. எனவே தென்காசி மாவட்ட ஆட்சியர், சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர், சிவகிரி வட்டாட்சியர் ஆகியோர் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்கிறது. இந்த வழக்கில் தென்காசி ஆட்சியர், சங்கரன்கோவில் கோட்டாட்சியர், சிவகிரி வட்டாட்சியர் ஆகியோர் ஜூலை 10-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in