மக்கள் நல்வாழ்வு, சமூக நீதி, வறுமை ஒழிப்பை மையமாக கொண்டு தமிழக வளர்ச்சிக்கான திட்டங்கள் நிறைவேற்றம் - முதல்வர் பெருமிதம்

மக்கள் நல்வாழ்வு, சமூக நீதி, வறுமை ஒழிப்பை மையமாக கொண்டு தமிழக வளர்ச்சிக்கான திட்டங்கள் நிறைவேற்றம் - முதல்வர் பெருமிதம்
Updated on
2 min read

சென்னை: மனிதவள மேம்பாடு, மக்கள் நல்வாழ்வு, சமூக நீதி, வறுமை ஒழிப்பு, தொழில் வளர்ச்சி உள்ளிட்டவற்றை மையமாக கொண்டு தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், தமிழக அரசு செயல்படுத்தி வரும் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 2-வது ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.

இதில், உயர்கல்வி, தொழிலாளர் நலன், கூட்டுறவு, உணவு, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும்கதர், தகவல் தொழில்நுட்பம், உள்துறை, மதுவிலக்கு - ஆயத்தீர்வை, நீர்வளம், சமூக நலன், தொழில், இளைஞர் நலன், பொது மற்றும் மறுவாழ்வு, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் ஆகிய 13 துறைகள் சார்ந்த 55 திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும், 35 எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. துறை செயலர்கள் தங்கள் துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும்பல்வேறு திட்டங்களின் முன் னேற்றம் குறித்துவிளக்கினர்.

கூட்டத்தின் நிறைவாக, முதல் வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தின் எதிர்கால கட்டமைப்பு, வளர்ச்சிக்கு தேவையானதிட்டங்களை அரசு கண்ணும் கருத்துமாக செயல்படுத்தி வருகிறது. மாநில பொருளாதாரத்தின் ரத்த நாளங்களாக செயல்படுவதில் மூலதன முதலீடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அனைத்து துறைவளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, அந்தந்த துறைகளின்தேவைக்கேற்ப நிதி ஒதுக்கப்பட்டது. மனிதவள மேம்பாடு, மக்கள் நல்வாழ்வு, சமூக நீதி, வறுமை ஒழிப்பு, தொழில் வளர்ச்சி என பல்வேறு காரணிகளை மையமாககொண்டு, திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தின் சில திட்டங்கள், நாட்டின் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளன. இதனால்தான், நாட்டின் வளர்ச்சியில் தமிழகம் இன்ஜினாக உள்ளது என்று பிரதமர் மோடி பாராட்டினார்.

தொழிற்சாலைகளுக்கான உள்கட்டமைப்பில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்தி வருவதால், மேலும் தொழில் நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க ஆர்வம்காட்டி வருவதாகவும், 2 ஆண்டுகால ஆட்சியில் தொழில் முதலீடுகள் குவிந்து வருவதாகவும் பத்திரிகைகள் பாராட்டுகின்றன.

பெரும்பாலான முத்திரை திட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் காணப்பட்டாலும், ஒருசில திட்டங்களில் இன்னும்தொய்வு நிலை இருக்கிறது.

தொழிற்சாலைகளுக்கு உகந்த நிலம் கையகப்படுத்துதல், போக்குவரத்து, ஏற்றுமதிக்கான வசதிகள்,உள்கட்டமைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல சவால்களை எதிர்கொண்டு வருகிறோம். அவற்றை சந்திப்பதில் தீவிர கவனம் செலுத்தி, பிரச்சினைக்கு இடம் தராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.அப்போதுதான் உலகளாவிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொடர்ந்து தொழில் தொடங்க வழி ஏற்படும். இதற்கான ஒத்துழைப்பை அனைத்து துறை அலுவலர்களும் வழங்க வேண்டும்.

அரசுப் பணிகள் ஆமை வேகத்தில் அல்ல, சுனாமி வேகத்தில்கூடநடைபெறும் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் சில திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். இவை அனைத்தும் உங்கள் பங்களிப்பால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. எனவே, ஒவ்வொரு திட்டத்திலும் உங்கள் அர்ப்பணிப்பு, பங்களிப்பு அவசியம்.

கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தின் கட்டமைப்பு வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை உங்கள் ஒத்துழைப்புடன் நிறைவேற்றியுள்ளோம். அறிவிப்பதுடன் நிற்காமல்,திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதிலும் தனிகவனம் செலுத்த வேண்டும். திட்டத்தில் ஏற்படும் தாமதம், திட்ட செலவினத்தை அதிகப்படுத்தும். எனவே திட்டப் பணிகளை துரிதமாகவும், தரமாகவும் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக, வளமான மாநிலமாக உருவாக்க வேண்டும். இதற்கு அரசுக்கு நீங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, உதயநிதி, பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், கீதா ஜீவன், சக்கரபாணி, காந்தி, சி.வி.கணேசன், டிஆர்பி ராஜா, தலைமை செயலர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in