

சென்னை: 'மணிப்பூர் கலவரத்துக்கு பாஜகவே பொறுப்பு' என்னும் தலைப்பில் அனைத்துக் கட்சி கண்டன பொதுக்கூட்டம் தமிழக காங்கிரஸ் எஸ்சி பிரிவு சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று நடந்தது. கூட்டத்துக்கு எஸ்சி பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் தலைமை வகித்தார். கண்டன கூட்டத்தில் தலைவர்கள் பேசியதாவது:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக 3 நாட்கள் கலவரம் நடந்து 2 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டபோது, காவல்துறை எப்படி கைகட்டி நின்றதோ, அதேபோன்று மணிப்பூரில் இப்போது நடைபெறுகிறது. இங்கு கலவரத்தை தொடங்கச் செய்ததே பாஜகதான்.
தேசம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் ஆர்எஸ்எஸ், பாஜகவை அப்புறப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. எல்லை மாநிலங்கள் முழுவதும் இந்துக்கள் மட்டுமே இருக்க வேண்டும் என பாஜக விரும்புகிறது. இதற்காகவே மணிப்பூர் கலவரத்தை பாஜக கட்டவிழ்த்து விட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்: மணிப்பூரில் கலவரம் நடைபெறும் நிலையில், சம்பந்தப்பட்ட சமூகத்தையோ, கட்சிகளையோ பிரதமர் அழைத்து பேசவில்லை. இந்த கலவரத்துக்கு பொறுப்பேற்று மணிப்பூர் முதல்வர் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் அவரை பதவி நீக்க செய்யும் அதிகாரம் கொண்ட குடியரசு தலைவர், அதை செய்ய வேண்டும்.
தமிழக காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார்: இங்கு சிறுபான்மை மக்களைத் தாக்குபவர், வெளிநாடுகளில் சமத்துவத்தைப் பற்றி பேசுகிறார். இந்தியாவில் கோட்சே புகழ் பாடிவிட்டு, வெளிநாடுகளில் காந்தி புகழ்பாடும் வகையில் இரட்டை வேடம் போடுகிறார் பிரதமர். ரத்தக் கறைபடிந்த கைகளில் நாட்டை ஒப்படைத்தது தவறு என மக்கள் உணர்ந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் பேசினர்.
மேலும், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், இந்திய கம்யூனிஸ்ட் துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, தமிழக காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா, கட்சியின் துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, மனிதநேய மக்கள் கட்சி அமைப்பு செயலாளர் புதுமடம் ஹலீம் உள்ளிட்டோரும் உரையாற்றினர்.
இக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, மாவட்டத் தலைவர் சிவ ராஜசேகரன், எஸ்சி பிரிவு துணைத் தலைவர்கள் வின்சென்ட், நிலவன் பங்கேற்றனர்.
பொது சிவில் சட்டம் பொருந்தாது: முன்னதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, சென்னை விமானநிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பிரதமர் மோடி,பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவேன் என்று தன்னுடைய மக்களவை தேர்தல் பரப்புரையை ஆரம்பித்து உள்ளார். இந்த நாட்டில் ஒரே மதம், ஒரே இனம், ஒரே கலாச்சாரம், ஒரே இறை வழிபாடு கிடையாது. நிறைய கலாச்சாரம், மொழிகள், பலதரப்பட்ட மக்கள் இருப்பதால், பொது சிவில் சட்டம் இந்தியாவுக்கு பொருந்தாது’’ என்றார்.