Published : 29 Jun 2023 06:23 AM
Last Updated : 29 Jun 2023 06:23 AM

2025-ம் ஆண்டில் இந்தியா 3-வது பொருளாதார நாடாக மாறும்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து

திருப்பூர்: தற்போது உலகில் 5-வது பொருளாதார நாடாக உள்ள இந்தியா, வரும் 2025-ம் ஆண்டு 3-வது பொருளாதார நாடாக மாறும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: கடந்த காலங்களில் காங்கிரஸ், திமுக ஆட்சியில் செய்த சாதனைகளை, 9 ஆண்டுகளில் பாஜக மோடி அரசு மக்களுக்கு செய்து தலைசிறந்த நாடாக இந்தியாவை உருவாக்கி உள்ளது. கடந்த காங்கிரஸ் - திமுக ஆட்சியில் 2ஜி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், நிலக்கரி ஊழல் என ஊழலை குவித்தனர். ஊழல் செய்து கைது செய்யப்பட்ட அமைச்சரை முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க மறுக்கிறார்.

2014-ம் ஆண்டு முதல் ஆட்சி செய்யும் மோடி அரசு, டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கி, கடைக்கோடி மக்களுக்கும் அரசின் திட்டங்கள் நேரடியாக சென்றடையும் வகையில் வங்கி கணக்குகளை ஏற்படுத்தி, மானியத்தை வழங்கி வருகிறது.

தமிழகத்துக்கு தொழில் பூங்கா: இதேபோல தேர்தல் வாக்குறுதியான இளைஞர்களுக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. மேலும், ஏழை, ஏளிய மக்களுக்காக ரூ.5 லட்சத்துக்கான மருத்துவக் காப்பீடு, புதிய தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளது. குறிப்பாக 9 புதிய ரயில் தடங்கள் மற்றும் தொழில் முனைவோருக்காக பிஎம் மித்ரா திட்டம், தமிழகத்துக்கு என ஒரு தொழில் பூங்காவை ஒதுக்கியுள்ளார்.

தமிழுக்கு பெருமை: தற்போது 5-வது பொருளாதார நாடாக உள்ள இந்தியா 2025-ம் ஆண்டு 3-வது பொருளாதார நாடாக உருவாகும். உலக நாடுகளே இந்தியாவை எதிர்நோக்கும் வகையில் திட்டங்களை வகுத்து வருகிறார் மோடி. ஐ.நா சபையில் ’யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்று முழங்கி தமிழுக்கு பெருமை சேர்த்தவர் பிரதமர். தொடர்ந்து மக்களுக்கு மோடி அரசு சேவை செய்ய 2024 மக்களவை தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x