Published : 29 Jun 2023 06:26 AM
Last Updated : 29 Jun 2023 06:26 AM
மதுரை: பொய் வழக்குப் பதிவு செய்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: லாட்டரி விற்பனை குறித்து என் மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 7-ல் மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸார் என் அலுவலகத்துக்கு வந்து ரூ.4 லட்சத்தை எடுத்துக்கொண்டு என்னையும் அழைத்துச் சென்றனர். 2019-ல் போலீஸாருக்கு எதிராக நான் அளித்த புகாரைத் திரும்பபெறுமாறு என்னைக் கட்டாயப்படுத்தினர்.
அதற்கு நான் மறுத்ததால் 21 கிலோ கஞ்சா கடத்தியதாக வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர். இது பொய் வழக்காகும். எனவே, இவ்வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளேன். எனக்கு ஜாமீன் தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கி, மனுதாரர் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து சிறப்பு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை அறிக்கையை காவல் துறை சிறப்பு விசாரணைக் குழு தாக்கல் செய்தது. அதில், மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலைய ஆய்வாளர் பூமிநாதன், சார்பு ஆய்வாளர்கள் பேரரசி, அமலன், தலைமைக் காவலர்கள் நாகசுந்தர், பிரபாகரன் ஆகியோர் அசோக்குமார் என்பவர் மூலம் பொய்யான வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடைய காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் மீது 3 மாதத்தில் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர் காவல் ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT