

பெருங்களத்தூர்: பெருங்களத்தூரில் இருந்து சீனிவாசன் நகர் செல்லும் மேம்பாலம் நேற்று திறக்கப்பட்டது. பெருங்களத்தூரில் ரூ.234 கோடி செலவில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வண்டலூரில் இருந்து தாம்பரம் வரும் ஒரு வழி பாதையில் பாலம் திறக்கப்பட்டது. தாம்பரத்திலிருந்து வண்டலூர் செல்லும் பாதையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, முடிச்சூர் பகுதிகளுக்கு செல்லும் சீனிவாசன் நகர் பகுதி மேம்பால பணிகள் நிறைவடைந்து ஒரு மாதம் ஆகியும் பாலத்தை திறக்கவில்லை. எனவே பாலத்தை திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக இந்து தமிழ் நாளிதழில் படமும் வெளியானது.
இந்நிலையில் சீனிவாச நகர் பகுதி மேம்பாலத்தை நேற்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர. ராகுல் நாத், எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் செல்வம் நம்பி, அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: தாம்பரம் - வண்டலூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் ரூ.155 கோடி மதிப்பில் ஒரு பாலத்தை முதல்வர் திறந்து வைத்தார். அந்தப் பாலத்தின் இணைப்பு பாலமான பழைய பெருங்களத்தூர் மேம்பாலம் ரூ. 24.80 கோடி மதிப்பில் கட்டுப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பழைய பெருங்களத்தூர், முடிச்சூர், பீர்க்கன்காரணை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் மக்கள் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல பெரும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். அந்த சிரமத்தை போக்க இந்த பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பாலம் மூலம் தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெறுவார்கள். பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் இதன்மூலம் குறையும்.
வண்டலூர் மேம்பாலம், சிங்கப்பெருமாள் கோவில் மேம்பாலம், கூடுவாஞ்சேரியில் இருந்து மாடம்பாக்கம் செல்லும் மேம்பாலம், ஊரப்பாக்கம் பகுதிக்கு செல்லும் மேம்பாலம், தாம்பரம் மேம்பாலம், செங்கல்பட்டில் இருந்து திருக்கழுகுன்றம் செல்லும் ராட்ணக்கிணறு மேம்பாலம், செங்கல்பட்டு நெடுஞ்சாலையிலிருந்து செங்கல்பட்டு பகுதியின் உள்ளே செல்லும் மேம்பாலம், மதுராந்தகத்திலிருந்து சூனாம்பேடு செல்லும் மேம்பாலம், குரோம்பேட்டை மேம்பாலம் என அனைத்தும் 2006 - 2011-ல் திமுக ஆட்சியில் தான் போடப்பட்டது.
மேலும் பெருங்களத்தூர் பகுதியில் இருந்து நெடுங்குன்றம் பகுதி வழியாக செல்லும் பாலம் டிசம்பர் மாதம் திறக்கப்படும். கூடிய விரைவில் பாலங்கள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இவ்வாறு தெரிவித்தார்.