Published : 29 Jun 2023 06:23 AM
Last Updated : 29 Jun 2023 06:23 AM

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

சென்னை: தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு, பணி செய்ய இயலாத கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, தொழிலாளர் நலத் துறைச் செயலர் முகமது நசிமுதீன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், ‘‘தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற, 60 வயதுக்கு உட்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் இதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று சிகிச்சை, டயாலிசிஸ், புற்றுநோய், ஆஸ்துமா, சிலிக்கோசிஸ் மற்றும் பக்கவாதம் ஆகிய தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு, பணி செய்ய இயலாமல் சிகிச்சை மேற்கொண்டு வரும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தீவிர நோய் பாதிப்பு நலத்திட்ட உதவித் தொகையாக ஆண்டொன்றுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கும் திட்டம், முதல்கட்டமாக 3 ஆண்டுகளுக்கு அறிமுகப்படுத்தப்படும்.

இந்த நிதியுதவி 6 மாதங்களுக்கு ஒருமுறை விடுவிக்கப்படும். இந்தத் திட்டத்தினால் 1,500 பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் பயனடைவார்கள்’’ என்று அறிவித்தார். இந்நிலையில், இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, நிதியுதவி தேவைப்படும் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் பதிவு அட்டையை இணைத்து, தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையரிடம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், சிவில் சர்ஜன் நிலைக்கு மேற்பட்ட அரசு மருத்துவரிடம் இருந்து மருத்துவச் சான்றிதழ் பெற்றிருப்பதுடன், தீவிர நோய்க்கான சிகிச்சை பெற்று வருவதற்கான மருத்துவ ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு, அவர்களது வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1,000 வீதம் செலுத்தப்படும். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x