Published : 29 Jun 2023 06:41 AM
Last Updated : 29 Jun 2023 06:41 AM
சென்னை: மின்சார வாகனங்களை தரமாக, பாதுகாப்பானதாக தயாரிக்க தர விதிகளை உருவாக்க வேண்டும் என்று இந்திய தர நிர்ணயக் கழகத்தின் துணை தலைமை இயக்குநர் ராஜீவ் சர்மா வலியுறுத்தியுள்ளார்.
இந்திய தர நிர்ணயக் கழகத்தின் (பிஐஎஸ்) சென்னை கிளை அலுவலகம் சார்பில் ‘மின்சார வாகனங்களுக்கான இந்தியதரநிலைகள்’ என்ற தலைப்பில் சென்னையில் நேற்று கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உயர் அதிகாரிகள் பேசியதாவது:
பிஐஎஸ் துணை தலைமை இயக்குநர் (தென் மண்டலம்) யுஎஸ்பி யாதவ்: காலநிலை மாற்றம் நமது வாழ்வில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. போக்குவரத்து நெரிசல்,காற்று மாசுபாடு போன்றவற்றால் நகரங்கள் அதிகம் மாசுபடுகின்றன. ஒவ்வொரு நாடும் கார்பன் உமிழ்வை குறைக்க முயற்சிக்கிறது.
மின்சாரத்தை பயன்படுத்துவதன் மூலம், எரிபொருள் பயன்பாட்டை மாற்றுவதே இதற்கு உடனடி தீர்வு. அதே நேரம், பேட்டரிகள்போன்றவற்றை அப்புறப்படுத்துவது, ரீசார்ஜ் போன்றவை இதில் சவாலாக இருக்கும். மின்சார வாகனங்களை தரநிலைப்படுத்துவதால், இந்த சவால்களை சமாளிக்க முடியும்.
பிஐஎஸ் துணை தலைமை இயக்குநர் (தரப்படுத்தல்-1) ராஜீவ் சர்மா: மக்களின் உடல்நலம், நுகர்வோர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் தேசிய நலன்கள் ஆகியவற்றை மனதில்வைத்து பல்வேறு தரநிலைகளை பிஐஎஸ் உருவாக்குகிறது. மக்கள் தற்போது மின்சார வாகனங்களை அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
எனவே, மின்சார வாகனங்களை தரமாக, பாதுகாப்பானதாக தயாரிப்பதற்கான தர விதிகளை உருவாக்க வேண்டும். தற்போது, 22 ஆயிரம் பொருட்களுக்கு தர விதிகளை பிஐஎஸ் உருவாக்கியுள்ளது. அந்த வகையில், மின்சார வாகனங்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த பேட்டரிகளை தயாரிக்க தர நிர்ணயத்தை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத்தின் இயக்குநர் மற்றும் தலைவர் ஜி.பவானி, எலெக்ட்ரோ தொழில்நுட்பத் துறை தலைவர் ப்ரீத்தி பட்நாகர், விஞ்ஞானிகள் ஸ்ரீஜித் மோகன், ரித்விக் ஆனந்த் ஆகியோரும் பேசினர். இந்த நிகழ்ச்சியில், அரசு துறை அலுவலர்கள், கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT