Published : 29 Jun 2023 10:57 AM
Last Updated : 29 Jun 2023 10:57 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் ஏற்பட்ட தாமதம் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுச்சேரியை தேர்வு செய்து கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தது. ரூ.1,828 கோடிக்கு புதுச்சேரியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. பணிகள் அனைத்தும் 2024 ஜூன் மாதத்தில் முடிக்கவும் கால நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால் பெரும்பாலான பணிகள் காலத்தோடு மேற்கொள்ளப்படாததால் ரூ.1,828 கோடியாக இருந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான நிதி தற்போது ரூ.930.55 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது 131 பணிகள் மட்டும் மத்திய, மாநில அரசின் 50 சதவீத நிதி பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகிறது.
இதுவரை மத்திய அரசு பங்களிப்பாக ரூ.196 கோடியும், புதுச்சேரி அரசு பங்களிப்பாக ரூ.100 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தாமதப்படுவதாகவும், நிதி கோரி அனுப்பப்படும் கோப்புக்கு ஒப்புதல் அளிக்கப்படாமல் கோப்பை திருப்பி அனுப்புவதாகவும் தொடர்ந்து குற்றச் சாட்டு எழுந்து வருகிறது.
மேலும் இப்பிரச்சினையில் ஆளுநரும், முதல் வரும் தலையிட்டு திட்ட பணிகளை விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் கூறுகையில், ‘‘புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ரூ.80 கோடிக்கு 29 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதுவரை ரூ.12.4 கோடியில் 17 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ரூ.67.68 கோடியில் 12 பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுப் பணித்துறை சார்பில் ரூ.378 கோடிக்கு 66 பணிகள் நடைபெற இருக்கிறது. தற்போது வரை ரூ.26.16 கோடி செலவில் 17 பணிகள் நிறைவடைந்துள்ளது.
ரூ.143 கோடிக்கு 32 பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.209 கோடிக்கு 17 பணிகள் டெண்டர் விடும் நிலையில் உள்ளது. புதுச்சேரி நகராட்சி சார்பில் ரூ.26.5 கோடியில் 18 பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தற்போது ரூ.1.25 கோடியில் 4 பணிகள் முடிந்துள்ள நிலையில், ரூ.23.25 கோடிக்கு 13 பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.1.9 கோடிக்கு ஒரு பணி டெண்டர் விடப்பட உள்ளது.
வருவாய்த்துறை மூலம் ரூ.170 கோடிக்கு 8 பணிகளும், சுகாதாரத்துறை சார்பில் ரூ.9.8 கோடியில் ஒரு பணியும் நடைபெற்று வருகிறது. போக்குவரத்துத் துறை சார்பில் ரூ.27.25 கோடியில் மேற்கொள்ள வேண்டிய 2 பணிகள் டெண்டர் விடும் நிலையில் உள்ளன. தெற்கு ரயில்வே மூலம் முதலியார்பேட்டை கடலூர் சாலையில் ரூ.55 கோடிக்கு ரயில்வே மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கூடுதல் நிதி தேவைப்பட்டால், அதனை ரயில்வே மூலம் செலவு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இத்திட்டத்துக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. தேசிய கட்டிட கட்டுமான கழகம் சார்பில் ரூ.178 கோடிக்கு 7 பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதில் ரூ.121.5 கோடிக்கு 5 பணிகளை மேற்கொள்ள பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
ரூ.56.5 கோடிக்கு 2 பணிகளுக்கு சிறப்பு அனுமதி கோரி மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இதுவரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.39.81 கோடிக்கு 38 பணிகள் நிறைவடைந்துள்ளது. ரூ.414 கோடிக்கு 66 பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.416 கோடிக்கான 27 பணிகள் டெண்டர் விடும் நிலையில் உள்ளன. இதில் ரூ.55 கோடி மதிப்பிலான இசிஆர் புறநகர் பேருந்து நிலையம்,
நேரு வீதியில் உள்ள பழைய சிறை வளாகத்தில் வணிக வளாகத்துடன் பல அடுக்கு கார் பார்க்கிங் ஆகிய இரு திட்டங்களுக்கான கோப்புகள் சிறப்பு அனுமதிக்காக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி பணிகள் தாமதத்துக்கு ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள் மட்டும்காரணமல்ல.
இப்பணிகளை பொதுப்பணித்துறை, வருவாய், சுகாதாரம், புதுவை நகராட்சி, தேசிய கட்டிட கட்டுமான நிறுவனம், போக்குவரத்து, ரயில்வே உள்ளிட்ட 8 துறைகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. திட்ட பணிகள் தாமதத்துக்கு அத்துறைகளும் ஒருகாரணம். நிதிஒப்புதல் கோரி தலைமைச் செயலகத்துக்கு கோப்பு அனுப்பினால், ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பப்படுகிறது. இதனால் திட்டங்களை காலத்தோடு மேற்கொள்ள முடியவில்லை" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT