

சூப்பர் பாஸ்ட் ரயில்களாக மாற்றப் பட்ட 18 ரயில்களின் புதிய எண்கள் 15 நாட்களுக்கு மேலாகியும் கணினி முன்பதிவு மையத்தின் அறிவிப்புப் பலகையில் எழுதப்படாமல் உள்ளது. இதனால் பயணிக ளும், டிக்கெட் கவுன்ட்டரில் பணிபுரிவோரும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தெற்கு ரயில்வேயில் இயக்கப் படும் 18 எக்ஸ்பிரஸ் ரயில்கள் சூப்பர் பாஸ்ட் ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன. அதனால் அந்த ரயில்களின் எண்களும் மாற்றப்படுகின்றன. சூப்பர் பாஸ்ட் டாக மாற்றப்பட்ட ரயில்களின் புதிய எண்கள் ஜூலை 12, 13, 14, 17 ஆகிய தேதிகளில் இருந்து அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
ரயில்வே துறையின் உத்தரவுப் படி, தெற்கு ரயில்வேயில் இயக்கப்பட்டு வரும் சென்னை சென்ட்ரல் – ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ், சென்ட்ரல் – பழனி எக்ஸ்பிரஸ், சென்ட்ரல் – மங்களூர் வெஸ்ட் கோஸ்ட், சென்ட்ரல் – ஆலப்புழை, திருவனந்தபுரம் – சாலிமர், எர்ணாகுளம் – பாட்னா, இந்தூர் – திருவனந்தபுரம், கோர்பா – திருவனந்தபுரம், எர்ணாகுளம் – பாட்னா ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் சூப்பர்பாஸ்ட் ரயில்களாக ஆக்கப்பட்டுவிட்டன.
இந்த ரயில்களின் எண்கள் மாற்றப்பட்டு 15 நாட்களுக்கு மேல் ஆகியும் சென்னை சென்ட்ரல், எழும்பூர், மாம்பலம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களின் முன்பதிவு மையங்களில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையில் அவற்றின் புதிய எண்கள் எழுதி வைக்கப்படவில்லை.
இதனால் டிக்கெட் எடுக்க வருபவர்கள் மேற்சொன்ன ரயில்களின் பழைய எண்ணையே படிவத்தில் எழுதிக் கொண்டு கவுன்ட்டரில் டிக்கெட் எடுக்கப் போகிறார்கள். கவுன்ட்டரில் பணிபுரியும் பலர், “இந்த ரயிலின் எண் மாறிவிட்டது” என்று சொல்லி, கணினியில் புதிய எண்ணைப் பார்த்து படிவத்தில் மாற்றி எழுதிவிட்டு டிக்கெட் கொடுக்கிறார்கள். சிலர், “புதிய எண்ணை எழுதிக் கொடுங்கள்” என்று படிவத்தைத் திருப்பிக் கொடுத்து, பயணிகளையே எழுதச் சொல்கிறார்கள். இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், “சூப்பர்பாஸ்ட்டாக மாற்றப் பட்டுள்ள 18 ரயில்களின் புதிய எண்களை அறிவிப்புப் பலகையில் எழுதி வைக்க சில நாட்கள் ஆகும். அதுவரை டிக்கெட் எடுக்க வரும் பயணிகளிடம் சற்று கனிவுடன் நடந்து கொள்ளும்படி, கவுன்ட்டரில் உள்ள பணியாளர்களை கேட்டுக் கொண்டிருக்கிறோம்” என்றார். மேலும் அவர் கூறியது: இதுபோன்ற அறிவிப்புப் பலகை எழுதி வைப்பதற்கு ரயில்வே நிர்வாகம் தனியாக நிதி ஒதுக்குவதில்லை.
அதனால், தனியார் நிறுவனங்களை “ஸ்பான்சர்” செய்யச் சொல்லி, அவர்கள் மூலமாகவே ரயில் வருகை, புறப்பாடு குறித்த வண்ண அறிவிப்புப் பலகைகளை வைக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இப்போதுகூட சூப்பர் பாஸ்ட்டாக மாற்றப்பட்டுள்ள 18 ரயில்களின் புதிய எண்களை எழுதி வைப்பதற்கும் “ஸ்பான்சர்” தேடிக் கொண்டிருக்கிறோம்” என்றார்.