Published : 28 Jun 2023 10:09 PM
Last Updated : 28 Jun 2023 10:09 PM
வேலூர்: வேலூர் மாநகர மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த புதிய பேருந்து நிலையம் ரூ.53 கோடியில் திறக்கப்பட்டு ஓராண்டாகிறது. வேலூர் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தை கடந்த ஆண்டு ஜூன் 29-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திறந்து வைத்ததுடன் பேருந்துகளின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தனத்தால் செப்டம்பர் மாதம் தான் பேருந்துநிலையம் முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இருப்பினும், பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்து ஓராண்டாகியும் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது.
ஏற்கெனவே, வேலூர் புதிய பேருந்து நிலையம் கட்டுமான ஊழல் குற்றச்சாட்டு விசாரணை முடிக்கப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டும், மழைநீரால் சுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
வீணாகும் ரூ.53 கோடி: சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி சுமார் 9.25 ஏக்கர் பரப்பளவில் உள்ள பேருந்து நிலையத்தின் கட்டிட வளாகம் மட்டும் 3,187 சதுர மீட்டர் கொண்டது. இங்கு ஒரே நேரத்தில் 84 பேருந்துகள் வந்து செல்ல முடியும். பொது மக்களுக்காக 82 கடைகள், 3 உணவகங்கள் கட்டப்பட்டுள்ளன (14 கடைகள் மட்டும் தான் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன.
அந்த கடைகளும் திறக்கப்படவில்லை). மொத்தம் 11 இடங்களில் 75 இருக்கை களுடன் கூடிய பயணிகள் காத்திருப்பு பகுதியும், தாய்ப்பால் ஊட்டும் அறையும் கட்டியுள்ளனர். பேருந்து நிலையத்தின் முதல் தளத்துக்கு செல்ல 2 லிப்ட் வசதியும், பயணிகளுக்காக 7 இடங்களில் கழிப்பறைகள் வெஸ்டர்ன் மற்றும் இண்டியன் வகைகளாக கட்டியுள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்காக தனி கழிப் பறை வசதிகள் உள்ளன.
புதிய பேருந்து நிலையத்தின் நவீன கட்டமைப்பாக 50 கி.வா மின் உற்பத்தி செய்யும் சூரிய ஒளி தகடுகள் பொருத்திஉள்ளனர். இதன்மூலம் பகல் நேரத்தில் பேருந்து நிலையத்தில் உள்ள 150 மின் விசிறிகள், 5 மின் மோட்டார்களை இயக்க முடியும். இவை எல்லாம் இருந்தும் என்ன பயன் என்ற நிலைதான் உள்ளது.
என்னதான் உள்ளது...?: வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் என்னதான் உள்ளது என்றால் எதுவுமே இல்லை என்று தான் கூற முடியும். பயணிகளுக்கு தலைவலி என்றால் 1 ரூபாய் மாத்திரை வாங்கக்கூட மருந்து கடை இல்லை. கிரீன் சர்க்கிள் பகுதிக்கு வந்தால் தான் மருந்து வாங்க முடியும். குடிப்பதற்கு தண்ணீர் பாட்டிலை கூடுதல் விலைக்குத்தான் வாங்க முடியும்.
பேருந்து நிலையத்தில் உள்ள தற்காலிக கடைகள், தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமித்துள்ளனர். பசிக்கு சாப்பிட உணவகம் இல்லை. பேருந்து நிலையத்துக்கு வெளியே வந்தால்தான் உணவு கிடைக்கும். அந்த உணவகங்களில் அதிக விலை கொடுத்துதான் சாப்பிட முடியும். தேநீர் குடிக்க வேண்டுமானாலும் பேருந்து நிலையத்துக்கு வெளியேதான் செல்ல வேண்டும்.
ஏடிஎம் மையம் இல்லை: பேருந்து நிலையத்துக்கு சென்னை, பெங்களூரு, சேலம், திருச்சி, திருப்பதி என பல்வேறு ஊர்களில் இருந்து வந்து சென்றாலும் அவசரமாக பணம் தேவை என்றால் பேருந்து நிலையத்துக்கு வெளியே இருக்கும் ஏடிஎம் மையத்துக்குதான் செல்ல வேண்டும். அங்கு ஏடிஎம் மையம் இருப்பது வேலூர் மக்களுக்கு மட்டும்தான் தெரியும்.
அந்த மையத்தில் எப்போதும் பணம் இருக்குமா? என்பதையும் உறுதியாக கூற முடியாது. பேருந்து நிலையத்தில் ஏடிஎம் மையங்கள் அமைக்க இடம் தேர்வு செய்ததுடன் அடுத்தகட்ட வேலைகளை தொடங்கவில்லை. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் பழுதாகி பல மாதங்களாகிறது. குடிநீர் தொட்டி காட்சி பொருளாக உள்ளது. தரைதளத்தில் உள்ள கட்டண கழிப்பறை சுவர் ஓராண்டுக்குள் விரிசல் ஏற்பட்டு சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுகிறது. முதல் தளத்தில் இருக்கும் கழிப்பறை களை பூட்டி மிகவும் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
குறிப்பாக, முதல் தளம் மதுபான பாராகவும், கஞ்சா புகைக்கும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. பேருந்து நிலையத்தின் சுற்றுச்சுவர் சிறுநீர் கழிக்கும் பகுதியாக மாறி அந்தப் பக்கம் நெருங்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. புறக்காவல் நிலையத்தை தயார் செய்துகாவல் துறையினர் வசம் ஒப்படைக்காமல் உள்ளனர்.
அரசு போக்குவரத்துக் கழகஊழியர்களுக்கு ஓய்வறைகள் ஒதுக்கீடு செய்தாலும் திறந்த வெளியில் இருப்பதால் தரையில் படுத்து உறங்கி செல்லும் நிலை உள்ளது. பேருந்து நிலையத்தில் இருக்கைகள் உள்ளன, மின் விசிறி ஓடுகிறது, மின் விளக்குகள் எரிகிறது என்பதைத்தவிர வேறு எந்த வசதிகளும் இல்லை. இதுதான் நவீன பேருந்து நிலையமா? என பொதுமக்கள் மத்தியில் நகைப்புக்குரியதாக மாறியுள்ளது.
இது தொடர்பாக வேலூர் மாவட்ட பாமக செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான கே.எல்.இளவழகன் கூறும்போது, ‘‘புதிய பேருந்து நிலையத்தில் குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லை. சுகாதாரம் இல்லாததால் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. பேருந்துகள் வந்து செல்வது குறித்த எந்த அறிவிப்பும் இல்லாததும் பயணிகளுக்கு சிரமமாக உள்ளது’’ என்றார்.
இது குறித்து, வேலூர் மேயர் சுஜாதா ஆனந்தகுமாரிடம் கேட்டதற்கு, ‘‘புதிய பேருந்து நிலையத்தில் ஏலம் விடப்பட்ட கடைகளை திறக்க ஆர்டர் கொடுத்துவிட்டோம். வாடகை அதிகமாக இருப்பதாக கூறி பல கடைகளை ஏலம் எடுக்க முன்வரவில்லை. ஏடிஎம் மையங்கள் தொடங்க வங்கிகளிடம் பேசி வருகிறோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT