

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பான நடைமுறைப்படி வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்டம்தோறும் ஜூலை 4 முதல் ஆய்வு செய்யப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகளை ஆய்வு செய்வது தொடர்பாக மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான ஒருநாள் கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதனை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தொடங்கி வைத்தார். இந்திய தேர்தல் ஆணைய பிரதிநிதிகள் மற்றும் பெங்களூரு பாரத மின்னணு நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்று, தொழில்நுட்ப ரீதியிலான வழிகாட்டுதல்களை மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சத்யபிரத சாஹு கூறியதாவது: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் கருவியின் தரம் குறித்து ஆய்வு செய்வது தொடர்பாக தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. கருவிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தேர்தல் அலுவலர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இதையடுத்து, ஜூலை 4-ம் தேதி முதல் மாவட்டம்தோறும் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் கருவிகள் ஆய்வு செய்யப்படும். இதில் தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்பார்கள். வழக்கமாக தேர்தலுக்குஓராண்டுக்கு முன்பாக இந்த நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். அதன்படி, சோதனை செய்தபின்கிடங்குகளில் கருவிகள் வைக்கப்படும். மீண்டும் கருவிகள் சோதனை செய்யப்பட்டு, தேர்தலின்போது பயன்படுத்தப்படும்.
தேவைக்கு அதிகமாக இயந்திரங்கள்: தமிழகத்தைப் பொருத்தவரை 68,036 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை பொருத்தே அங்கு தேவைப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட முடியும். இருப்பினும் தேவைக்கு அதிகமாகவே வாக்குப்பதிவு இயந்திரங்களை கையிருப்பில் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில், 1 லட்சத்து 78,357மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், அதைக் கட்டுப்படுத்துவதற்கான 1 லட்சத்து 2,581 இயந்திரங்கள்,1 லட்சத்து 8,732 விவிபேட் இயந்திரங்கள் ஆகியன உள்ளன. இவ்வாறு 30 சதவீத இயந்திரங்கள் கூடுதலாகவே இருக்கின்றன.
புதிய வாக்காளர்கள் விண்ணப்பித்து இருந்தால் அடுத்த 3 மாதங்களில் அவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். இவ்வாறு சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.