500 டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கு கவுன்சலிங் மூலம் பணி மாறுதல்

500 டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கு கவுன்சலிங் மூலம் பணி மாறுதல்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் மூடப்பட்ட 500 டாஸ்மாக் மதுபானக்கடைகளில் பணியாற்றியவர்களுக்கு கவுன்சலிங் மூலம் பணி மாறுதல் வழங்குவதற்கான நடைமுறை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்த 5,329 டாஸ்மாக் கடைகளில் 500 கடைகள்ஜூன் 22-ம் தேதி முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அக்கடைகளில் பணியாற்றிய மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு பணி மாறுதல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில், அதற்கான நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் எஸ்.விசாகன்,அனைத்து மூத்த மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பணி மூப்பு அடிப்படையில்...: டாஸ்மாக் கடைகளில் மாவட்டத்துக்குள் ஏற்கெனவே உள்ள காலிப் பணியிடங்களுக்கு பணி மாறுதல் செய்யப்படும்போது, மாவட்ட அளவிலான பணி மூப்புஅடிப்படையில் மாறுதல் பின்பற்றப்பட வேண்டும். அதன்படி, டெப்போக்கள், மண்டலம் மற்றும் மாவட்ட மேலாளர் அலுவலக அறிவிப்பு பலகைககளில் பணிமூப்பு பட்டியல் ஒட்டப்பட வேண்டும்.

பணி மூப்பு பட்டியல் வெளியிடப்பட்ட 2 நாட்களுக்குப் பிறகு, மண்டலம் மற்றும் மாவட்ட மேலாளர்கள் பணி மூப்பு பட்டியலை சரி செய்து கவுன்சலிங் நடத்தவேண்டும். காலி இடங்களை வெளிப்படையாக அறிவித்து, புகார்களுக்கு இடமின்றி பணிமூப்பு அடிப்படையில் பணியாளர்களை அழைத்து கவுன்சலிங் நடத்த வேண்டும்.

மேலும், மாவட்ட மேலாளர்கள் முன்மொழிவு அளித்தால், அதைமண்டல மேலாளர்கள் ஆய்வு செய்து பணி மாறுதல் உத்தரவுகளை அளிக்க வேண்டும். பிறமாவட்டங்கள் மற்றும் மண்டலங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு செல்ல மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் விருப்பம் தெரிவித்தால், அதற்கான பட்டியலை பணி மூப்பு அடிப்படையில் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

காலி பணியிடங்களை நிரப்பிய பின்னரும் பணியாளர்கள் உபரி இருந்தால், அது தொடர்பான விவரங்களையும் பணி மூப்பு அடிப்படையில் அனுப்பி வைக்க வேண்டும். இவ்விவரங்கள் மூலம் பிற மண்டலங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப முடியும். இதனை மண்டல, மாவட்ட மேலாளர்கள் கண்காணித்து, சரியாக செயல்படுத்தி, விரிவான தகவல் அறிக்கையை தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in