Published : 28 Jun 2023 07:05 AM
Last Updated : 28 Jun 2023 07:05 AM

இந்துசமய அறநிலையத் துறையினர் கனகசபையில் ஏறி வழிபட முயற்சி - சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் குவிக்கப்பட்டுள்ள போலீஸார்.

கடலூர்/சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் கனக சபையில் ஏறி வழிபட இந்துசமய அறநிலையத் துறையினர் முயற்சித்தனர். அவர்களை கீழே தள்ளி விட்டு தீட்சிதர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலின் கனக சபையில், பக்தர்கள் வழிபட அனுமதிப்பதில்லை என்று இக்கோயிலின் தீட்சிதர்கள் முடிவெடுத்து செயல்படுத்தி வந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் கனகசபையில் வழிபட அனுமதி அளித்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டது. அதன்படி பக்தர்கள் வழிபட்டு வந்தனர்.

இதற்கிடையே, ஆனி மாத திருமஞ்சன தரிசன விழாவையொட்டி கடந்த 24 -ம் தேதி தொடங்கி, நேற்று வரையில் 4 நாட்கள் பக்தர்கள் கனக சபையில் (சிற்றம்பல மேடையில்) ஏறி வழிபட தடை விதித்து, கோயிலை நிர்வகிக்கும் தீட்சிதர்களால் அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது.

இதுதொடர்பான புகார்கள் வர, இந்து சமய அறநிலைத்துறையினர் கடந்த 24-ம் தேதி பதாகையை அகற்ற சென்ற போது, தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீட்சிதர்கள் வைத்த அந்த அறிவிப்பு பதாகை அகற்றப்பட்டது. பதாகையை அகற்றிய பிறகும் தீட்சிதர்கள் பக்தர்கள் மற்றும் பொதுமக்களை கனக சபையில் ஏறி வழிபட மறுத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை காங்கிரஸ் பிரமுகர் ஜெமினி ராதா உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்டவர்கள் கனகசபை வாயிலில் அமர்ந்து கனகசபையில் வழிபட அனுமதிக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். அப்போது பாஜகவினர், சங் பரிவார் அமைப்புகள் அங்கு கூட்டமாக வந்து அவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் கோயிலில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலைய துறையின் அலுவலர்கள் அரசு ஆணையை நிறைவேற்றும் வகையில், மற்றொரு வழியாக காவல்துறையினருடன் கனகசபைக்கு ஏறி வழிபட முயன்றனர். தீட்சிதர்கள் அவர்களை ஏறவிடாமல் தடுத்து கீழே தள்ளி விட்டனர். மேலும் தீட்சிதர்கள் கனகசபையை பூட்டிவிட்டு, கீழே வந்து காவல்துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவு 9 மணியைத் தாண்டியும் இச்சர்ச்சை நீடித்தது. கோயிலைச் சுற்றி ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

அமைச்சர் சேகர்பாபு தகவல்: இந்நிலையில் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது: சிதம்பரம் கோயிலை பொருத்தளவில் தீட்சிதர்கள், கோயிலுக்கு வரப்பெற்ற வரவுகள் குறித்து தகவல் தெரிவிக்க மறுப்பதோடு தங்களது சொந்த நிறுவனம் போல் கோயிலை பாவித்து கொண்டிருக்கின்றனர். இதைத்தான் அரசு தட்டி கேட்கிறது. அங்கு வழிபாட்டு முறைகளை மாற்றும் எண்ணம் துறைக்கு இல்லை. கனக சபையின் மீது பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை முடிவு எடுக்கலாம் என உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனி திருமஞ்சனத்தின்போது பக்தர்கள் கனகசபை மீது ஏறக் கூடாது என்ற நடைமுறை இல்லை. எனவே, இந்த 4 நாட்களும் கனக சபையின் மீது ஏறி தரிசனம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும். படிப்படியாக சட்ட மீறல்கள் எது இருந்தாலும் அவை அனைத்தையும் உடைத்தெறிந்து சட்டத்தின் ஆட்சி இங்கு நடைபெறுகிறது என்பதை நடராஜர் கோயிலிலும், தீட்சிதர்களிடமும் இந்த துறை நிரூபிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x