Published : 28 Jun 2023 09:31 AM
Last Updated : 28 Jun 2023 09:31 AM
கூடலூர்: கூடலூரில் இருவருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், எல்லை பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தபட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பொதுமக்கள் உள்ளாகினர். டெங்குவால் இறப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால், டெங்கு காய்ச்சலை தடுக்கவும், நோய் பரப்பும் கொசுக்களை ஒழிக்கும் பணியிலும் கேரளா மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், கர்நாடகா மாநிலத்திலிருந்து கூடலூர் வந்த ஒருவருக்கும், கேரளாவிலிருந்து வந்த ஒருவருக்கும் டெங்கு பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளதால் தமிழக எல்லையில் சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எல்லை கிராமங்களுக்கு 10-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் சென்று, டெங்கு நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும், டெங்கு நோய்களை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் மற்றும் லார்வாக்களை அழிக்க, திறந்தவெளி தண்ணீர் தொட்டிகளில் மருந்து தெளிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தொட்டிகளில் நீண்ட நாட்களாக தேங்கி இருக்கும் தண்ணீரை அகற்ற வழியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து நீலகிரி மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் பாலுசாமி கூறும்போது, "நீலகிரி மாவட்டத்தில் யாருக்கும் இதுவரை டெங்கு பாதிப்பு ஏற்படவில்லை. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில எல்லைகளில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
டெங்கு நோய் குறித்தும், அதனை தடுப்பது குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. யாரேனும் டெங்கு அறிகுறிகளுடன் உள்ளார்களா? என சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு நோய்களை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்கள் மற்றும் லார்வாக்களை அழிக்க மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT