

ஈரோடு: ஈரோட்டில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் 6-வது நாளாக தொடரும் நிலையில், இன்று (28-ம் தேதி) கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடக்கிறது.
ஈரோடு மாநகராட்சி தூய்மைப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் கொடுப்பதை கைவிட வேண்டும், டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும், 480 நாட்கள் பணியாற்றிய தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியமான, நாளொன்றுக்கு ரூ.725 வீதம், ஏப்ரல் முதல் வழங்க வேண்டும், மாதந்தோறும் முதல் தேதியில் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோடு மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐந்தாவது நாளாக நேற்றும் வேலைநிறுத்தம் தொடர்ந்தது. இந்நிலையில், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தூய்மைப் பணியாளர்கள் நேற்று பேரணியாகச் சென்றனர். அங்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் எஸ்.கணேஷிடம், முதல்வருக்கான கோரிக்கை மனுவினை அளித்தனர்.
பின்னர் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், ஆறாவது நாளாக இன்றும் (28-ம் தேதி) வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்வதென முடிவெடுக்கப்பட்டது. தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதோடு, ஈரோடு காளைமாட்டு சிலை அருகில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட உள்ளனர்.
பொதுமக்கள் அதிருப்தி: ஈரோடு மாநகராட்சி பகுதியில், கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால், நகரில் வைக்கப்பட்டு இருந்த குப்பைத்தொட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டன. வீடுகள் தோறும் வரும் தூய்மைப் பணியாளர்களிடம் குப்பைகளை கொடுக்க வேண்டும் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டது. தற்போது, தூய்மைப் பணியாளர்கள் 5-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், வீடுகளில் தேங்கிய குப்பைகளை சாலையோரங்களில் பொதுமக்கள் கொட்டி வருகின்றனர்.
இதனால், துர்நாற்றம் வீசி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தூய்மைப் பணிகளை தனியாருக்கு விடும் முடிவு, அரசின் கொள்கை முடிவு என்பதால், மாநகராட்சி மற்றும் தொழிலாளர் நலத்துறையினர் எவ்வித முடிவும் எடுக்க முடியாமல் உள்ளது. மாவட்ட அமைச்சரும் சென்னையில் முகாமிட்டுள்ள நிலையில், பிரச்சினைக்கான தீர்வு குறித்து யாரும் அக்கறை செலுத்தவில்லை என பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.