

மதுரை: மதுரையில் மெட்ரோ ரயில் ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கிய நிலையில், மண் பரிசோதனை, வழித் தடங்களை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மெட்ரோ திட்ட துணை இயக்குநர் அர்ச்சுனன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் மதுரை ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கள ஆய்வு செய்தனர்.
இது குறித்து அர்ச்சுனன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமங்கலம் - ஒத்தக்கடை வரையிலான மெட்ரோ திட்ட கட்டுமானப் பணிக்கு 90 சதவீத மண் பரி சோதனை செய்யப்பட்டுள்ளது. திருமங்கலம் பேருந்து நிலையம், தோப்பூர், மதுரை ரயில் நிலையம், மாசி வீதிகளில் ரயில் நிறுத்தம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மாசி வீதிகளில் தேரோட்டப் பாதை பாதிக்காமல் பழமை வாய்ந்த கட்டிடங்கள் சேதமின்றி நிறுத்தங்கள் அமைக்கப்படும். வைகை ஆற்றின் வழியாக கோரிப்பாளையம் வரை சுரங்கப் பாதை வழித்தடம், மீனாட்சி கோயில் பகுதியில் நிறுத்தம் அமைப்பது சவாலானது. அதற்கான சாத்தியக் கூறுகள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.