

சென்னை: தமிழக உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் உள்துறை செயலாளர் அமுதா இந்த இடமாற்ற உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "தமிழக உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக உளவுத்துறை ஏடிஜிபி பொறுப்பை டாக்டர் செந்தில் வேலன் ஐபிஎஸ் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார்.
அதேநேரம், டேவிட்சன் தேவாசீர்வாதம் காவல்துறை தலைமையக ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். ஆவடி காவல் ஆணையாளராக இருந்த அருண் ஐபிஎஸ் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்படுகிறார். சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியான ஷங்கர் ஐபிஎஸ், ஆவடி காவல் ஆணையாளராக பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவி ஸ்ரீமதி விவகாரம் தொடங்கி, அமலாக்கத்துறை ரெய்டு வரை தமிழகத்தில் பல விஷயங்களில் உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் உளவுத்துறை ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.