

மதுரை: மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட பெரியார் பேருந்து நிலையத்தில் குடிநீர், கழிப்பறை வசதி செய்யப்படாததால் ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்ப மத்திய இணை அமைச்சர் நாராயணசுவாமி உத்தரவிட்டார்.
மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.170 கோடி செலவில் பெரியார் பேருந்து நிலையம் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 2021 ஆகஸ்ட் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. புதிய பேருந்து நிலையத்தில் 57 பேருந்துகள் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. 450 கடைகளுடன் வணிக வளாகமும் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் மத்திய சமூக நீதித் துறை இணை அமைச்சர் நாராயண சுவாமி, மாநகராட்சியின் ஆணையாளர் பிரவீன்குமார் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் பேருந்து நிலையத்தில் கழிவறை, குடிநீர் வசதி முறையாக இல்லாமல் இருந்தது. பேருந்து நிலையத்தின் தடுப்புகள் உடைந்திருந்தன. இதையடுத்து பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்பு மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.
பின்னர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''மதுரை பெரியார் பேருந்து நிலைய வணிக வளாக கட்டிடப் பணிகள் 2 மாதத்துக்குள் நிறைவடைய உள்ளதாக தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 1500 கோடி ரூபாய்க்கு மதுரையில் பணிகள் நடந்துள்ள நிலையில், 170 கோடி ரூபாய்க்கு மேல் கட்டப்பட்ட பெரியார் பேருந்து நிலையத்தின் பணிகள் முறையாக பராமரிக்கப்படவில்லை.
தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் வந்து செல்லும் நிலையில் ஒரே ஒரு கழிவறை மட்டுமே உள்ளது. போதுமான குடிநீர் வசதியும் செய்யப்படவில்லை. கழிப்பறை எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், குடிநீர் வசதியை மேம்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.'' என்று கூறினார்.
பேட்டியின் போது பாஜக பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள், மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, மாவட்ட செயலாளர் சகாதேவன், ஊடகப்பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் உள்பட பலர் இருந்தனர்.