Last Updated : 27 Jun, 2023 01:25 PM

 

Published : 27 Jun 2023 01:25 PM
Last Updated : 27 Jun 2023 01:25 PM

உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றலாகும் நீதிபதிகள் - பட்டியல் வெளியீடு

மதுரை: உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜூலை 3 முதல் 3 மாதங்களுக்கு வழக்குகளை விசாரிக்கவுள்ள நீதிபதிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை பணிக்கு மாற்றப்படுவது வழக்கம். தற்போது உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதி ஆர்.சுப்பிரமணியம் தலைமையில் வழக்குகளை விசாரித்துவரும் நீதிபதிகளின் 3 மாத பணிக்காலம் இந்த வாரத்துடன் முடிகிறது. இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜூலை 3 முதல் பணிபுரியும் நீதிபதிகள் மற்றும் அவர்கள் விசாரிக்க உள்ள வழக்குகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விபரம்: நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முதல் அமர்வில் 3.7.2023 முதல் 7.7.2023 வரை பொது நல மனு, 2022 ஆண்டு முதலான ரிட் மேல்முறையீடு மனுக்களை விசாரிக்கின்றனர். 10.7.2023 முதல் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முதல் அமர்வில் பொதுநல மனுக்கள், ரிட் மேல்முறையீடு மனுக்களை விசாரிக்கின்றனர்.

நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் இரண்டாவது அமர்வில் ஆடகொணர்வு மனுக்கள், குற்றவியல் மேல்முறையீடு மனுக்களையும், நீதிபதிகள் அனிதா சுமந்த், ஆர்.விஜயகுமார் ஆகியோர் 3வது அமர்வில் உரிமையியல் மேல்முறையீடு மனுக்கள், 2021 வரையிலான ரிட் மேல்முறையீடு மனுக்களையும், நீதிபதி பி.வேல்முருகன், 3.7.2023 முதல் 14.7.2023 வரை 2016 வரையிலான இரண்டாவது மேல்முறையீடு மனுக்களையும் விசாரிக்கின்றனர்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 2019 வரையிலான கனிமம், நில உச்சவரம்பு, நில சீர்த்திருத்தம், நிலம் கையகப்படுத்தல், சுதந்திர போராட்ட தியாகிகள் ஓய்வூதியம் தொடர்பான மனுக்களையும், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி 17.7.2023 முதல் 2016 ஆண்டு வரையிலான இரண்டாவது மேல்முறையீடு மனுக்களையும், நீதிபதி பி.புகழேந்தி 2022 ஆண்டு முதலான கனிமம், நில சீர்த்திருத்தம், நில உச்சவரம்பு, நிலம் கையகப்படுத்தல் தொடர்பான மனுக்களையும் விசாரிக்கின்றனர்.

நீதிபதி பட்டு தேவானந்த் 2019 வரையிலான தொழிலாளர், அரசுப் பணி தொடர்பான ரிட் மனுக்களையும், நீதிபதி ஜி.இளங்கோவன், ஜாமீன், முன் ஜாமீன் மனுக்களையும், நீதிபதி கே.முரளிசங்கர், 2020 வரையிலான உரிமையியல் மனுக்களையும், நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, வரி, சுங்கம், மத்திய, மாநில கலால், வனம், தொழில்துறை, அறநிலையத்துறை, மோட்டார் வாகனம் தொடர்பான மனுக்களையும், 2020, 2021 ஆண்டில் தாக்கலான கனிமம், நில உச்சவரம்பு, நிலம் கையகப்படுத்தல் தொடர்பான மனுக்களையும் விசாரிக்கின்றனர்.

நீதிபதி டி.நாகர்ஜூன் 2022 ஆண்டு முதலான குற்றவியல் நடைமுறைச் சட்டம் 407 மற்றும் 482-ன் கீழ் தாக்கலாகும் குற்றவியல் உண்மை மனுக்களையும், நீதிபதி எல்.விக்டோரியா கவுரி 2020 முதலான தொழிலாளர், அரசுப் பணி தொடர்பான மனுக்களையும், நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், 2022 முதலான சிபிஐ, ஊழல் தடுப்பு, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குககளின் மேல்முறையீடு, குற்றவியல் சீராய்வு மனுக்களையும் விசாரிக்கின்றனர்.

நீதிபதி கே.கோவிந்தராஜன் திலகவாடி 2020 முதலான உரிமையியல் சீராய்வு மனுக்கள், நீதிபதி பி.வடமலை 2021 முதலான இரண்டாவது மேல்முறையீடு மனுக்கள், நீதிபதி பி.தனபாலன், 2021 வரையிலான குற்றவியல் உண்மை மனுக்கள் மற்றும் குற்றவியல் மேல்முறையீடு மனுக்கள், நீதிபதி சி.குமரப்பன் 2019 வரையிலான குற்றவியல் சீராய்வு மனுக்கள், 2017 முதல் 2020 வரையிலான இரண்டாவது மேல்முறையீடு மனுக்களையும் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x