

திருவண்ணாமலை: இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் கடந்தும் ஜவ்வாதுமலையில் உள்ள கானமலை ஊராட்சியில் சாலை வசதி இல்லாததால் மலைவாழ் மக்கள் இன்றளவும் துன்பப்படுகின்றனர்.
நாட்டின் வளர்ச்சிக்கு ‘சாலை கட்டமைப்பு’ முக்கியத்துவம் எனக் கூறும் மத்திய, மாநில அரசுகள், ‘மக்களின் வளர்ச்சிக்கும் - வாழ்வாதாரத்துக்கும்’ சாலை கட்டமைப்பு அவசியம் என்ற கூற்றை புறம் தள்ளிவிடுகிறது. இதில், அதிகளவில் மலைவாழ் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் கடந்தும், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் சாலை கட்டமைப்பு இல்லாததால் மலைவாழ் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
ஜவ்வாதுமலையில் 11 ஊராட்சிகள் உள்ளன. முக்கிய ஊராட்சியில் ஒன்றாக கானமலை ஊராட்சியில் 32 குக்கிராமங்கள் உள்ளன. சுமார் 20 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். விவசாய நிலம் மற்றும் வன நிலங்களில் பல தலைமுறையாக கேழ்வரகு, சாமை, கம்பு உள்ளிட்ட சிறுதானியங்கள் பயிரிடப்படுகின்றன. தோட்டக்கலை பயிர்கள் உள்ளிட்ட இதர பயிர்களும் பயிரிடப்படுகின்றன. வானம் பார்த்த பூமி என்பதால், ஒரு போக சாகுபடியை செய்து முடிப்பதற்குள் மலைவாழ் மக்கள் திணறி விடுகின்றனர்.
கல்வி, மருத்துவம், வாழ்வாதாரம் என அனைத்துக்கும் படைவீடு, போளூர், கண்ணமங்கலம் போன்ற சமதளத்தில் உள்ள பகுதிகளை சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான போக்குவரத்து வசதி எதுவும் கிடையாது. சாலை இல்லாததால் ஆட்டோ, ஆம்புலன்ஸ் மற்றும் சிற்றுந்து உள்ளிட்ட வாகனங்களின் போக்குவரத்து இல்லை. 32 குக்கிராமங்களும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக இருக்காது. ஆங்காங்கே ஒரு கிராமம் என்ற அடிப்படையில் இருக்கும். ஒரு முனைக்கும் மற்றொரு முனைக்கும் சுமார் 30 கி.மீ., தொலைவு இருக்கலாம் என மலைவாழ் மக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து மேலும் அவர்கள் கூறும்போது, “கானமலை, எலந்தம்பட்டு, புளியாங்குப்பம், பூதமலை, சீங்காடு, கனாவூர் மற்றும் காம்பட்டு உட்பட 22 கிராமங்களுக்கு சாலை வசதி முற்றிலும் கிடையாது. 5 முதல் 15 கி.மீ., தொலைவுக்கு மலைப் பாதைகளை கடந்தால்தான், சாலை வசதி உள்ள பகுதியை அடைய முடியும். ஆம்புலன்ஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை இயக்க முடியாது. இரு சக்கர வாகனத்தில், சாலை வசதி உள்ள பகுதிக்கு அழைத்து வந்து, பின்னர் பேருந்து மூலம் மருத்துவ மனைக்கு கொண்டு செல்வோம்.
மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவு போன்ற காரணங்களால் வெளியே நடமாட முடியாது. இதனால், நோயால் பாதித்த மக்களுக்கு உடனடியாக சிகிச்சை கிடைக்காது. ஓரிரு நாட்கள், பாட்டி வைத்தியம் முறையில் நாங்களே மருந்து உட்கொள்வோம். அதன்பிறகு, மருத்துவமனைக்கு கொண்டு செல்வோம். நோயின் தாக்கம் தீவிரமாக இருக்கும்போது, உடனடியாக சிகிச்சை கிடைக்காமல் பலர் உயிரிழந்துள்ளனர். எலந்தம்பட்டு கிராமத்தில் சாந்தி, சீங்காடு கிராமத்தில் சுசிலா ஆகியோர் உடல்நலக்குறைவால் உடனடியாக சிகிச்சை கிடைக்காமல் கடந்த 10 நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவர்கள் உடல்களை டோலி கட்டி எடுத்து சென்றோம். உயிரிழந்த பிறகும் எங்களின் பரிதாபம் தொடர்கிறது.
கர்ப்பிணிகள் பரிதவிப்பு: கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெறுவதற்காக, மலை கிராமங்களில் ஒன்றான நம்மியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுமார் 40 கி.மீ., பயணிக்க வேண்டும். முதற்கட்டமாக 12 கி.மீ., தொலைவுக்கு நடந்தும், இரு சக்கர வாகனத்தில் பயணிக்க வேண்டும். காலை 6 மணிக்கு புறப்பட்டால் இரவு 7 மணிக்கு வீடு திரும்ப முடியும். ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேரம் அதிகரித்தால், அங்கேயே தங்கிவிட்டு, மறுநாள்தான் வீட்டுக்கு திரும்பு முடியும். ஏனென்றால், மலைப்பாதையில் இரவு நேரங்களில் நடந்து செல்லவும், இரு சக்கர வாகனத்தில் பயணிக்கவும் முடியாது. பிரசவ வலி ஏற்படும் பெண்களை, மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்ல முடியாது. மலைப்பாதையில் பயணித்து செல்லும்போது விபரீதம் ஏற்பட்டு விடுகிறது.
பாதிக்கும் பெண் கல்வி: மருத்துவத்தை போன்று கல்வியும் பாதிக்கப்படுகிறது. எங்கள் மலை கிராமங்களில் தொடக்கக் கல்வி வரை உள்ளது. நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை வகுப்புகள் படிக்க வெளியூர்களுக்கு செல்ல வேண்டும். இதற்காக, மலைப்பாதையை கடக்க வேண்டும். இதனால் பெண் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. வறுமை காரணமாக பலர் புலம்பெயர்ந்து சென்று திரும்புவதும் இயல்பானது. பொருளாதாரத்தில் சற்று முன்னேறியவர்கள், விடுதி களில் சேர்த்து பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். ஒரு சிலர், அரசின் விடுதிகளில் சேர்த்து விடுகின்றனர். மாணவர்களும் குழுவாக பள்ளிக்கு சென்று திரும்புகின்றனர்.
கூடுதல் செலவு: மருத்துவம், கல்வியை போன்று வாழ்வாதாரமும் சிதைக்கப்படுகிறது. சாலை வசதி இல்லாததால், விவசாய இடு பொருட்களை கொண்டு வரவும், விளை பொருட்களை சந்தைப்படுத்த கொண்டு செல்லவும் முடியாத நிலை தொடர்கிறது. இதற்காக கூடுதலாக செலவிட வேண்டியுள்ளது.
விவசாய சாகுபடியைவிட, வாகன செலவு அதிகம் உள்ளது. இருப்பினும், விளை பொருட்களுக்கு சந்தையில் உரிய விலை கிடைப்பதில்லை. மலைவாழ் மக்களுக்கான அரசாங்கம் என கூறிக்கொள்ளும் மத்திய, மாநில அரசுகள், மலைவாழ் மக்களின் உயிரிழப்புகளை தடுக்கவும், மலைவாழ் மாணவர்கள் கல்வி கற்கவும் மற்றும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் சாலை அமைத்து கொடுக்க முன்வர வேண்டும்” என்றனர்