

திருநெல்வேலி: திருநெல்வேலி சிஎஸ்ஐ திருமண்டல நிர்வாகத்தில் நடந்த மோதல் விவகாரத்தில் திமுக எம்.பி, ஞானதிரவியம் உள்ளிட்ட 33 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
திருநெல்வேலி சிஎஸ்ஐ திருமண்டல நிர்வாகத்தின் பேராயராக பர்னபாஸ் இருந்து வருகிறார். இவருக்கும், இந்த திருச்சபையின் செயலாளராக இருந்துவரும் ஜெயசிங் என்பவருக்கும் இடையே பல்வேறு முரண்பாடுகள் இருந்து வந்தது. ஜெயசிங்கின் ஆதரவாளராக திமுக எம்.பி, ஞானதிரவியம் செயல்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. எம்.பி, பதவியை பயன்படுத்தி, ஞானதிரவியம் தன்னிச்சையாக நடப்பதாக குற்றம்சாட்டி, அவர்மீது பேராயர் கடந்த வாரம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சிஎஸ்ஐ திருமண்டலத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஜான் பள்ளியின் தாளாளர் பதவியிலிருந்தும், மற்றும் கல்விக்குழு தொடர்பான பொறுப்பிலிருந்தும் ஞானதிரவியத்தை நீக்கி பேராயர் பர்னபாஸ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து திங்கள்கிழமை சிஎஸ்ஐ திருமண்டல அலுவலகத்துக்குச் சென்ற ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள், பேராயர் பர்னபாஸ் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தின. இந்த மோதலில் காயமடைந்தவர், இச்சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்படி, திமுக எம்.பி ஞானதிரவியம் உள்ளிட்ட 33 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காயம் ஏற்படுத்துதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல், அடித்து துன்புறுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், "திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி திமுக உறுப்பினர் சா.ஞானதிரவியம், கழக வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்படுவதாக தலைமைக் கழகத்துக்கு புகார் வரப்பெற்றுள்ளது. அவரது செயல், கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் உள்ளதால், இது குறித்த அவரது விளக்கத்தையும், செயல்பாடுகளையும் இக்கடிதம் கிடைத்த 7 நாட்களுக்குள் தலைமை கழகத்துக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்க தவறும் பட்சத்தில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.