

சென்னை: திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் லியோ. இப்படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்துள்ளார். இந்த ஆண்டு அக்டோபரில் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லியோ படத்தின் முதல் பாடலான `நா ரெடி' பாடல், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அண்மையில் வெளியானது. இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம், இந்தப் பாடலுக்கு எதிராக சென்னை காவல் ஆணையரிடம் ஆன்லைன் வாயிலாக நேற்று புகார் மனு அளித்துள்ளார்.
அதில், ‘போதைப் பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடியிசத்தை உருவாக்கும் வகையிலும் நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் பாடல் இடம் பெற்றுள்ளது. இந்தப் பாடல்வரிகள், இளைஞர்கள் மத்தியில் தவறான பழக்கத்தை ஏற்படுத்தும். போதைப் பொருட்களை ஆதரிக்கும் வகையிலும் இந்தப் பாடல் அமைந்துள்ளது.
மேலும் போதைப் பொருட்கள் பயன்பாட்டுக்கு இளைஞர்களை தூண்டி விடுதல் போன்ற குற்றத்துக்காக, இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.