

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை கணினிமயமாக்கி, கேரளாபோல் முதலில் பில் வழங்கி அதன்பின் மதுபானங்களை பெற்றுச் செல்லும் திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மதுபானங்களுக்கு ரூ.10 கூடுதலாக பெறப்படுவதாக தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டு வந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைச்சர் முத்துசாமி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில் தற்போது தமிழகத்தில் 500 மதுக்கடைகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில், போலி மதுபானம், கூடுதல் விலைக்கு விற்பனை உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க, டாஸ்மாக் கடைகளை கணினிமயமாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 5 ஆயிரம் மதுபானக்கடைகளை கணினிமயமாக்க பொதுத்துறை நிறுவனமான ரெயில்டெல் நிறுவனத்துக்கு ரூ.294 கோடி மதிப்பிலான பணியாணையை வழங்கியுள்ளது. இதன் மூலம் மதுபான உற்பத்தி, விற்பனை, இருப்பு உள்ளிட்ட அனைத்தும் கணினிமயமாகும். இதன் மூலம் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவது தடுக்கப்படும் என தெரிகிறது.
இதுதவிர, கேரளாவில் நடைமுறையில் உள்ளதுபோல், மதுபானக்கடையின் அருகில் உள்ள கவுன்ட்டரில் வாங்கப்போகும் மதுபானத்துக்கான பில் போட்டு, அதனை பெற்று அருகில் உள்ள கடையில் மதுபான பாட்டில்களை வாங்கும் முறையை தமிழகத்தில் அறிமுகப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. இதன் மூலம் முறைகேடுகள் தடுக்கப்படும் என தெரிகிறது.