அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 வாரம் மருத்துவ கண்காணிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 வாரம் மருத்துவ கண்காணிப்பு
Updated on
2 min read

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் மறுப்புத் தெரிவித்த நிலையில், அவரை இலாகா இல்லாத அமைச்சராக அறிவித்து தமிழக அரசு கடந்த ஜூன் 16-ல் அரசாணை பிறப்பித்தது.

இதை ரத்து செய்யக்கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதேபோல, செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிடக் கோரி கொளத்தூர் ராமச்சந்திரன் என்பவரும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதில் தனக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்துள்ள ஆளுநர், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என எங்கு தெரிவித்துள்ளார் என்று மனுதாரர்களிடம் கேள்வி எழுப்பினர்.

மேலும், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க அனுமதி அளிக்கக் கோரி தமிழக முதல்வர், ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தை தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தனர்.

அதன்படி, இந்த வழக்கு நேற்று பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல்வர் மற்றும் ஆளுநருக்கு இடையிலான கடிதப் போக்குவரத்து ரகசியமானது என்பதால், அதை சமர்ப்பிக்க இயலாது எனக்கூறிய மனுதாரர்கள் தரப்பு, இது தொடர்பான பத்திரிகை செய்திகளை தாக்கல் செய்தனர். மேலும், கடந்த மே மாதமே செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென ஆளுநர், முதல்வருக்கு பரிந்துரை செய்துள்ளார். எனவே, இது தொடர்பான கடிதங்களை தாக்கல் செய்ய ஆளுநர் மாளிகைக்கு உத்தரவிட வேண்டுமெனக் கோரினர்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை ஆளுநர் ஏற்கவில்லை என்பதற்கும், அவரை நீக்க உத்தரவிட்டார் என்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இந்த விவகாரத்தில் தற்போதைய சூழலில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்து குறித்து கேள்வி எழுப்ப முடியாது. அதை சமர்ப்பிக்கும்படி ஆளுநர் மாளிகைக்கும் உத்தரவிட முடியாது” என்றார்.

அப்போது அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் தரப்பில், செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக தொடருகிறார் என விளக்கம் அளிக்கக்கோரி நாங்களும் வழக்குத் தொடர்ந்துள்ளோம். அந்த வழக்கையும் விசாரிக்க வேண்டும் எனக்கோரப்பட்டது.

அதையேற்ற நீதிபதிகள், இந்த மூன்று வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து வரும் ஜூலை 7-க்கு தள்ளிவைத்துள்ளனர்.

செந்தில் பாலாஜிக்கு 2 வாரம் மருத்துவ கண்காணிப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் கடந்த 21-ல் இதய அறுவை சிகிச்சை நடந்தது. கடந்த 24-ம் தேதி அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், அவர் இன்னும் 2 வாரங்களுக்கு மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டுமென்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “தமிழகத்தில் டெங்கு பாதிப்பு இல்லை. கேரளா-தமிழக எல்லைகளில் உள்ள 13 இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்” என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in