

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி 3 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்து வருதால், அவரை மாற்றுமாறு மூத்த தலைவர்கள் டெல்லி தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக காங்கிரஸுக்கு புதிய தலைவரை நியமிக்க தலைமை முடிவு செய்துள்ளது. புதிய தலைவர் தினமும் 250 கி.மீ. தொலைவு பயணித்து கட்சியை வளர்க்கும் அளவுக்கு உடல் திறன் பெற்றவராகவும், இளம் தலைவராகவும் இருக்க வேண்டுமெனவும், தமிழ் பேச்சாற்றல் மிக்கவராகவும் இருக்க வேண்டுமெனவும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
தற்போது, எம்.பி.க்கள் சு.திருநாவுக்கரசர், ஜோதிமணி, செல்லகுமார், மாணிக் தாகூர், கார்த்தி சிதம்பரம், முன்னாள் எம்.பி. பெ.விஸ்வநாதன் ஆகியோர் மாநிலத் தலைவர் பதவி கோரி வருகின்றனர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலும் தலைவர் பதவிக்கான பட்டியலில் இருக்கிறார்.
டெல்லியில் முகாம்: ஜோதிமணி, செல்லகுமார், மாணிக் தாகூர் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு, தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர். அதேபோல, விஸ்வநாதன் சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் கார்கேவை சந்தித்து, தனது விருப்பத்தை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், டெல்லி தலைமை தயாரித்துள்ள உத்தேசப் பட்டியல் தொடர்பாக ஆலோசிக்க, கே.எஸ்.அழகிரியை டெல்லிக்கு கட்சித் தலைமை அழைத்துள்ளது. அவர் நேற்று முன்தினம் டெல்லி சென்று, தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலை சந்தித்துள்ளார். தொடர்ந்து, சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்திக்க முயற்சித்துள்ளார்.
வெற்றிக்காக பிரச்சாரம்...: கார்கே, வேணுகோபால் சந்திப்புகளின்போது, தமிழகத்தில் 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவைld தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களின்போது, கூட்டணிக் கட்சி ஒதுக்கிய பெரும்பாலான இடங்களில் தனது தலைமையிலான பிரச்சாரம் காரணமாக காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பதால், வரும் மக்களவைத் தேர்தலிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்காக பிரச்சாரம் செய்ய விரும்புவதாகவும், அதுவரை தனது பதவியை நீட்டிக்க வேண்டுமெனவும் அழகிரி வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக டெல்லி தலைமை விரைவில் முடிவடுக்கும் என்று தமிழக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.