

திருச்சி: அரசின் புதிய விதிமுறைகளைக் கண்டித்து கிரஷர், கல் குவாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் நேற்று முதல் தொடங்கியது.
தமிழ்நாடு கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும், அரசின் புதிய விதிமுறைகளால் கல் குவாரி, கிரஷர் தொழிலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.சின்னசாமி, நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழ்நாடு முழுவதும் 2,000கல் குவாரிகள், 3,500 கிரஷர்யூனிட்கள் உள்ளன. ஒவ்வொரு கிரஷர் யூனிட்டிலும் சுமார் 300 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தத் தொழிலை பாதிக்கும் வகையில் மத்திய அரசு அண்மையில் சிலபுதிய விதிமுறைகளை வகுத்துஅறிவித்தது. அந்த விதிமுறைகளை கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் அமல்படுத்தாத நிலையில், தமிழக அரசு அதிகாரிகள் அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோரிக்கைகள்: எனவே, ‘‘முக்கிய கனிமங்களுக்கான விதிமுறைகளை, கல் மற்றும் ஜல்லி உடைக்கும் தொழில்கள் போன்ற சிறிய கனிம தொழில்களுக்கு அமல்படுத்துவதை நிறுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் அரசு நிலங்களில் பலகோடி ரூபாய் மதிப்பிலான கனிம வளங்கள் திருட்டில் பயனடைந்த அரசு அதிகாரிகள் மீதுசட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிரஷர், கல் குவாரி உரிமையாளர்களை அச்சுறுத்தும் அதிகாரிகள் மீதும், சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் மிரட்டி பணம் பறிப்போர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தமிழகத்தில் அனைத்து கிரஷர், கல் குவாரிகள் இன்று முதல் (ஜூன் 26) இயங்காது. கிரஷர் லாரிகளும் இயங்காது.
ரெடி மிக்ஸ், ஹாட் மிக்ஸ் உள்ளிட்ட இதர கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கும் கல், ஜல்லி ஆகியவற்றை அனுப்பமாட்டோம் என்றார்.