Published : 27 Jun 2023 09:13 AM
Last Updated : 27 Jun 2023 09:13 AM
ஓசூர்: மகசூல் பாதிப்பால் ஓசூரில் ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனையானது.
ஓசூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், தளி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி உள்ளிட்ட காய்கறி பயிர்களை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட சந்தைகளில் ஆண்டு முழுவதும் தக்காளிக்கு வரவேற்பு இருப்பதால், ஓசூர் பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தக்காளி வரத்து அதிகரித்ததால், ஒரு கிலோ ரூ.10 முதல் 18 வரை விற்பனையானது.
இந்நிலையில், தக்காளியில் நோய் தாக்கம் காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டு, சில நாட்களாகச் சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக விலை படிப்படியாக உயர்ந்துள்ளது. ஓசூர் உழவர் சந்தையில் நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.55-க்கு விற்பனையான தக்காளி நேற்று ரூ.80-க்கு விற்பனையானது. சில்லறை விலையில் கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையானது.
இதுதொடர்பாக ஓசூர் உழவர் சந்தை அலுவலர் கூறும்போது,“ஓசூர் உழவர் சந்தைக்குத் தினசரி 8 டன் தக்காளி வரை தக்காளி வரத்து இருக்கும். தற்போது, வெயில் தாக்கம் மற்றும் நோய் தாக்கத்தால் செடிகள் பட்டுப்போகின. இதனால், மகசூல் குறைந்துள்ளது. எனவே, விலை அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் மேலும், விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT