கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.70 ஆக உயர்வு: பண்ணை பசுமை கடைகளில் ரூ.64-க்கு விற்பனை

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.70 ஆக உயர்வு: பண்ணை பசுமை கடைகளில் ரூ.64-க்கு விற்பனை
Updated on
1 min read

சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. டியூசிஎஸ் பண்ணை பசுமை கடைகளில் கிலோரூ.64-க்கு விற்கப்பட்டது.

இந்த ஆண்டு கோடையில் கடும் வெயில் வாட்டியது. வழக்கமாக கோடைக் காலத்தில், பாசன நீர் பற்றாக்குறை, கடும் வெயிலில் செடிகள் பாதிக்கப்படுவது போன்ற காரணங்களால் தக்காளி உற்பத்தி குறைந்து, அவற்றின் விலை உயரும்.

ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் 2-வது வாரம் வரை தக்காளி விலை குறைவாக இருந்தது. அதன் பிறகு விலை ஏற்றம் அடைந்து கோயம்பேடு சந்தையில் நேற்று முதல்தர தக்காளி, மொத்த விலையில் கிலோ ரூ.70-க்கு விற்கப்பட்டது. இது சில்லறை விற்பனை சந்தைகளில் தரத்துக்கு ஏற்றவாறு கிலோ ரூ.40 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டது.

டியூசிஎஸ் பண்ணை பசுமை கூட்டுறவு கடைகளில் தக்காளி கிலோ ரூ.64-க்கு விற்கப்பட்டது. இதன் காரணமாக ஓட்டல்களில் தக்காளி காரச்சட்னி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இல்லத்தரசிகளும் தக்காளி வாங்குவதை குறைத்துக் கொண்டுள்ளனர்.

கோயம்பேடு சந்தையில் மற்ற காய்கறிகளான பீன்ஸ் கிலோ ரூ.70, கேரட் ரூ.45, சாம்பார் வெங்காயம் ரூ.40, பாகற்காய் ரூ.30, பீட்ரூட், நூக்கல் தலா ரூ.25, கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய் தலா ரூ.20, உருளைக்கிழங்கு ரூ.16, வெங்காயம் ரூ.11, முருங்கைக்காய் ரூ.10, முட்டைக்கோஸ் ரூ.8 என விற்கப்பட்டது.

தக்காளி விலை உயர்ந்திருப்பது தொடர்பாக கோயம்பேடு மலர், காய், கனி மொத்த வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் கூறியதாவது:

கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாகத் தினமும் 800 டன் தக்காளி வரும். ஆனால் நேற்று 350 டன் மட்டுமே வந்தது. அண்மையில் தக்காளி விலை குறைந்ததால், விவசாயிகள் தக்காளி பயிரிடுவதைக் கடந்த 2 மாதங்களாகத் தவிர்த்துவிட்டனர். சிலர் மட்டுமே பயிரிட்டுள்ளனர்.

தமிழக எல்லையை ஒட்டிய ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில பகுதிகளிலும் விளைச்சல் குறைந்துள்ளது. அங்கு தக்காளி வாங்க வியாபாரிகள் மத்தியில் கடும் போட்டி நிலவுவதால், விலை உயர்ந்துள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்கு இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in