

சென்னை: வண்டலூர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசன்ட் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கடந்த ஜூன் 19 முதல் 25-ம் தேதி வரை நாட்டு நலப்பணித் திட்டத்துக்கான தேசிய ஒருமைப்பாடு முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் இந்திய அளவில் 11 மாநிலங்களில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களிலிருந்தும் தமிழ்நாட்டில் 10 கல்வி நிறுவனங்களிலிருந்தும் நாட்டு நலப்பணித் திட்டத்தில் உள்ள மாணவர்களும் ஒருங்கிணைப்பாளர்களும் பங்கேற்றனர். இவர்களுக்கான அனைத்து வசதிகளையும் கிரசன்ட் நிறுவனம் வழங்கியது.
இம்முகாமில் பங்கேற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று தமிழ் மொழியின் தொன்மை மற்றும் தேசிய ஒருமைப்பாடு குறித்து சிறப்புரையாற்றினார்.
இம்முகாமில் பல்வேறு நாட்டு நலத்திட்டப் பணிகள் நடைபெற்றன. மரம் நடுதல், ரத்த தானம், தூய்மைப் பணி, யோகா போன்ற நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் ஆளுமைத் திறன், பருவநிலை மாற்றம், சுய அடையாளம், நமதுபிரதமர் நமது பெருமை, ஸ்டார்ட்அப் இந்தியா-ஜி20, இளவயதுக்கு கவனச்சிதறல் போன்ற தலைப்புகளில் நிபுணத்துவம் வாய்ந்த பல்வேறு ஆளுமைகள் மாணவர்களிடையே உரையாற்றினர்.
மாமல்லபுரத்துக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள சிற்பங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. நிறைவு விழாவுக்கு மாநில என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளரும் கல்லூரி கல்வி இயக்குநருமான ஜி.கீதா நிறைவுரை வழங்கினார்.
பி.எஸ்.அப்துர் ரஹ்மான கிரசன்ட் அறிவியல் தொழில்நுட்ப நிறுவன துணைவேந்தர் டி.முருகேசன், பதிவாளர் ந.ராஜா உசேன்,என்எஸ்எஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் அயூப்கான் தாவூத் பங்கேற்றனர். இவ்வாறு கிரசன்ட் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் அளித்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.