Published : 27 Jun 2023 10:03 AM
Last Updated : 27 Jun 2023 10:03 AM

சென்னை மாநகராட்சி வாகன பராமரிப்பில் ஓரவஞ்சனை: குப்பையாகும் குப்பை அள்ளும் வண்டிகள்

வெளி நாட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள்.

சென்னை: சென்னை மாநகராட்சியில் தினமும் 5,100 டன் குப்பை சேகரமாகிறது. இவற்றை சுமார் 19 ஆயிரம் தூய்மைப் பணியாளர்கள் மூலம் சேகரித்து கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

திடக்கழிவு மேலாண்மை விதிகள்-2016 ன்படி குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக வகை பிரித்து பெறமுன்னெடுப்புகள் எதையும் மேற்கொள்ளவில்லை. ஆறுகள், கால்வாய் ஓரங்களில் குப்பை கொட்டுவது தொடர்கிறது.

திடக்கழிவு மேலாண்மைப் பணியின் முதுகெலும்பாக இருப்பது வாகனங்கள். மாநகராட்சி பகுதியில் 15 மண்டலங்கள் உள்ள நிலையில் தண்டையார்பேட்டை, ராயபுரம்,திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர் ஆகிய மண்டலங்களில் மட்டும் மாநகராட்சி நேரடியாக திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இப்பணிகளுக்காக 158 பெரிய காம்பாக்டர், 211 சிறிய காம்பாக்டர் இயந்திரங்கள், 117 டிப்பர் லாரிகள் இயக்கப்படுகின்றன. 1000-க்கும் மேற்பட்ட பேட்டரி வாகனங்கள் மற்றும் 3 சக்கர சைக்கிள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை முறையாக பராமரிக்கப்படுவதில்லை.

டிப்பர் லாரிகளுக்கு மட் கார்டு இல்லை. இதனால் மழை காலங்களில் சேற்றை வாரி இறைக்கிறது. லாரிகளின் பாகங்களும் துருப்பிடித்து சேதமாயின. இதுதொடர்பாக இந்து தமிழ் திசை நாளிதழில் செய்தி வெளியான பின்னர், தரமற்ற தகடுகளை வைத்து, வெல்டிங் செய்து ஏனோ தானோவென வைத்துள்ளனர்.

அதேநேரம் அதிகாரிகள் பயன்படுத்தும் அரசு வாகனங்களில் பழுது ஏற்பட்டால், பிரத்யேகமாக பழுதுநீக்கும் நிலையத்தில் தரமான உதிரிபாகங்களைக் கொண்டு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. ஆனால் குப்பை அகற்றும் வாகனங்களுக்கு அந்த மரியாதை கிடைப்பதில்லை என பணியாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக மாநகராட்சி செங்கொடி சங்க பொதுச்செயலர் பி.சீனிவாசலு கூறியதாவது: திடக்கழிவு மேலாண்மைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களில் பழுதுஏற்பட்டால் அதற்கான பிரத்யேக பழுதுநீக்கும் நிறுவனத்தில் பழுது பார்ப்பதில்லை. மேலும் குப்பை அள்ளும் ஏராளமான பேட்டரி வாகனங்கள் பழுதாகி நிறுத்தப்பட்டுள்ளன. முன்பகுதியில் உடைந்த கண்ணாடி மாற்றப்படுவதில்லை.

சைடு மிரர் பொருத்துவது இல்லை. பலவற்றில் பிரேக் இல்லை. தொட்டிகளில் உள்ளகுப்பைகளை கொட்டும் காம்பாக்டர் வாகனங்களில் குப்பைசிந்தாமல் இருக்க பொருத்தப்படும் ரப்பர் ஷீட் கிழிந்தால் மாற்றிதருவதில்லை. கிடைக்கும் பொருட்களை கொண்டு கயிறுகளால் கட்டி தொழிலாளர்கள் சமாளித்து வருகின்றனர்.

மேலும் 3 சக்கர சைக்கிள்கள் அனைத்தும், செயின், பல் சக்கரம் மற்றும் பெடல், அமர்வதற்கான இருக்கை இன்றி தள்ளுவண்டிகளாகவே இயக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் உடல் வலி கூடுதல் உபத்திரம். பெரும்பாலும் பெண்களே இந்தப் பணியை மேற்கொள்வதால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும் சொந்த செலவில் வானகங்களை பராமரிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மாநகராட்சி நிர்வாகம் வழக்கமாக கண்காணித்து மேற்கொள்ள வேண்டிய இப்பணிகள் எதையும் மேற்கொள்ளாமல், வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் ஆய்வு செய்ய மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத் மற்றும் திடக்கழிவு மேலாண்மைத் துறை அதிகாரிகள் இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளுக்கு சென்று திரும்பியுள்ளனர். இது தற்போது சர்ச்சையாகியுள்ளது.

பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ள குப்பை அள்ளும்
வாகனங்கள்

இதுதொடர்பாக, அரசு நிர்வாகம் மற்றும் திடக்கழிவு மேலாண்மையில் அனுபவம்மிக்க சிலர் கூறியதாவது: சென்னையில் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை உர்பேசர் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த சேவைக்காக அந்நிறுவனத்துக்கு மாநகராட்சி ஆண்டுதோறும் பல நூறு கோடி ரூபாய் வழங்குகிறது.

இந்நிலையில் இந்நிறுவன செலவில் மேயர் உள்ளிட்ட மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு சென்றதை தவிர்த்திருக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகத்தால் பயன்பெறும் ஒரு நிறுவனம் வழங்கும் மறைமுக பரிகாரத்தை பொது ஊழியர்களான மக்கள் பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும் ஏற்பது குற்றம். மாநகராட்சி நிர்வாகத்தினர் ஆய்வு என்ற பெயரில் வெளிநாடு செல்லும் கருத்துருவுக்கு அரசு ஒப்புதல் அளித்திருக்கவே கூடாது.

மாநகராட்சி நிர்வாகம் தற்போது சென்ற நாடுகளும், சென்னையும் தட்பவெப்பநிலை, மக்களின் மனநிலை, திடக்கழிவு மேலாண்மை அமலாக்கம், புவியியல் அமைப்பு, மக்கள் தொகை, போக்குவரத்து போன்றவற்றில் முற்றிலும் வேறுபட்டு இருக்கின்றன. சென்னையில் அகற்றப்படும் குப்பைகளில் அதிக அளவில் மண் இருக்கும். எளிதில் மக்காது. வெளிநாட்டு குப்பைகளில் மண் இருக்காது. எளிதில் மக்கும். மண் கலந்த குப்பையை மேலாண்மை செய்ய வெளிநாட்டில் தீர்வு கிடைக்காது.

தூய்மை நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், கர்நாடக மாநிலம் மைசூர் போன்ற மாநகரங்களில் சிறப்பாக மேலாண்மை செய்கின்றனர். இந்தூரில் பிளாஸ்டிக் கழிவு, மருத்துவக் கழிவு, வீட்டுக் கழிவுகள், மின் கழிவுகள், அபாயகரமான கழிவுகள் என 5 வகையாக பிரித்து பெறப்படுகின்றன. ஆனால் சென்னையில் இன்னும் மக்கும், மக்காத குப்பை என வகை பிரித்து பெறுவதிலேயே தடுமாறிக் கொண்டிருக்கிறோம். அங்கு பார்த்து வந்தாலே, சென்னையில் 80 சதவீதம் அமல்படுத்த முடியும்.

பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ள குப்பை தொட்டிகள்.

திடக்கழிவு மேலாண்மை என்பது ஒன்றும் வெளிநாட்டில் கற்கக்கூடிய ராக்கெட் தொழில்நுட்பம் இல்லை. வீடுகள், கடைகளில் வகை பிரித்து, கீழே போடாமல், மாநகராட்சி தூய்மைப் பணியாளரிடம் மட்டும் கொடுத்தாலே, 90 சதவீதம் மாநகரம் தூய்மையாகிவிடும். அதற்கேற்ற வகையில் மக்கள் மனநிலையை மாற்ற முயற்சிக்க வேண்டும். அதற்கான வழிவகைகளை தான் மாநகராட்சி ஆராய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாநகராட்சி நிர்வாகத்தினர் வெளிநாடு சென்று வந்திருப்பது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் சிவ்தாஸ் மீனாவிடம் கேட்டபோது, "கொள்கைகளை உருவாக்குபவர்கள், வெளிநாடுகளில் எப்படி திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்கிறார்கள் என்று பார்வையிடுவது அவசியம்" என்றார்.

ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறும்போது, "பயோ மைனிங் என்பது புதிய தொழில்நுட்பத்தை வெளிநாடுகளில் எப்படி மேற்கொள்ளப்படுகிறது என்பதை பார்க்க வேண்டியது நல்லது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x