கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தல்: அரசுக்கு அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி 10 நாள் கெடு

எஸ்.பி.வேலுமணி | கோப்புப்படம்
எஸ்.பி.வேலுமணி | கோப்புப்படம்
Updated on
1 min read

கோவை: 10 நாட்களில் கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை மாவட்ட நிர்வாகம் தடுக்காவிட்டால், மக்களை திரட்டி லாரிகளை தடுத்து நிறுத்துவோம் என அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக கோவை விமான நிலையத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “அரசுக்கு செலுத்தும் தொகை போக, ஒவ்வொரு குவாரியில் இருந்தும் அதிக தொகையை லஞ்சமாக வசூலித்து அந்த தொழிலை முடக்கிவிட்டனர். இதன்காரணமாக, தமிழகத்தில் கல்குவாரிகள் மற்றும் கிரசர் உரிமையாளர்கள் இன்று (ஜூன் 26) முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் 5 ஆயிரம் கல்குவாரிகள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரசர்கள் உள்ளன.

கேரளாவில் இருந்து ஒரு லோடு மணலோ, கல்லோ கூட எடுத்து வர முடியாது. ஆனால், தற்போது கோவையில் இருந்து சுமார் 5,000 லோடு கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. இந்த வேலைநிறுத்தத்தினால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தம் குறித்து அரசின் கவனத்துக்கு வந்ததா எனத் தெரியவில்லை.

எம் சாண்ட் குவாரிகளை முடக்கி, மீண்டும் மணல் குவாரிகள் திறக்கும் வாய்ப்பை இந்த அரசை உருவாக்கியுள்ளது. 10 நாட்களில் கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தலை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும். பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வாளையார் வழியாகத்தான் அவை கடத்தப்படுகின்றன. இதை தடுத்து நிறுத்தாவிட்டால், மக்களை திரட்டி தடுப்பு ஏற்படுத்தி லாரிகளை தடுத்து நிறுத்துவோம்.

குவாரிகளில் நடைபெறும் வசூலை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அதிமுக ஆட்சியில் அம்மா சிமெண்ட் குறைந்த விலையில் வழங்கப்பட்டது. திமுக அரசு அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை முடக்கியுள்ளது” என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in