அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்கக் கோரி விவசாயிகள் நடைபயணம், சாலை மறியல்

மதுரை அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறந்து அரவையை தொடங்கக்கோரி விவசாயிகள் நடைபயணம் மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போலீஸாரை கண்டித்து விவசாயிகள் அச்சம்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். | படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
மதுரை அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறந்து அரவையை தொடங்கக்கோரி விவசாயிகள் நடைபயணம் மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போலீஸாரை கண்டித்து விவசாயிகள் அச்சம்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். | படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
Updated on
1 min read

மதுரை: அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்கக் கோரி விவசாயிகள் நடைபயணம் செல்வதற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். தடையை மீறி சென்றதால் விவசாயிகள் போலீஸார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், போலீஸாரை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் 4 ஆண்டாக மூடியிருக்கும் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறந்து நடப்பாண்டு அரவையை தொடங்க வேண்டும். ஆலை மறுசீரமைப்புக்கு ரூ.10 கோடி, அலுவலக பணியாளர்கள் சம்பளம் பாக்கி ரூ.16 கோடி உள்பட மொத்தம் ரூ.26 கோடி என ஆய்வுக்குழு ஆய்வு ஓராண்டாகியும் நிதி வழங்காமல் தாமதிப்பதை கண்டித்தும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் உள்பட பல்வேறு சங்கத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று நடைபயணம் மேற்கொண்டனர்.

முன்னதாக, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனிச்சாமி தலைமையில் மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் கரு.கதிரேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன், மார்க்சிஸ்ட் புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் உள்பட 150க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்து நடைபயணத்தை தொடங்கினர். இதற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். தடையை மீறி அலங்காநல்லூரிலிருந்து அச்சம்பட்டி வரை நடைபயணம் சென்றனர். அங்கு தடுத்து நிறுத்திய போலீஸாருக்கும் விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீஸாரை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதித்தது.

பின்னர், சமயநல்லூர் டிஎஸ்பி பாலசுந்தரம் பேச்சுவார்த்தை நடத்தி வாகனங்களில் சென்று ஆட்சியரை சந்தித்து மனு அளிக்குமாறு கோரிக்கை விடுத்தார். பின்னர் வாகனங்களில் புறப்பட்டுச் சென்ற விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனு அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in