

செங்கல்பட்டு: செங்கை மாவட்ட ஊராட்சிகளில் சேகரமாகும் குப்பை எடுத்துச் செல்ல, ஊராட்சிகளுக்கு அரசு சார்பில் ரூ.5.83 கோடி மதிப்பில் வழங்கிய டிராக்டர்கள் பயன்படுத்தப்படாமல் ஊராட்சி அலுவலகங்களிலேயே முடங்கிக் கிடக்கின்றன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள, 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பல ஊராட்சிகளில், குப்பை சேகரிக்க போதிய வாகனங்கள் இல்லை. இந்நிலையில் தமிழக அரசு, ஊராட்சிகளின் மக்கள் தொகை அடிப்படையில் குப்பைகளை எடுத்துச் செல்வதற்கு, புதிய டிராக்டர்களை வழங்கி உள்ளது. இதில், 7 ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சில ஊராட்சிகளுக்கு 107 டிராக்டர்களும் டிரைய்லர்களும் வழங்கப்பட்டுள்ளன.
இதன் மதிப்பு, ரூ.5 கோடியே, 83 லட்சத்து 37,989 ஆகும். இந்த டிராக்டர்களை இயக்குவதற்கு ஓட்டுநர்கள் இல்லாததால் நிறுத்தியே வைக்கப் பட்டுள்ளன. டிராக்டர் வழங்கி 3 மாதங்கள் ஆகியும், இன்னும் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்துபதிவெண் பெறப்படவில்லை. அதேபோல் ட்ரெய்லர்களும் முழுவதுமாக வழங்கப்படவில்லை.
அதனால் இவை ஊராட்சி அலுவலக வளாகங்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் வரிப்பணத்தில் ஊராட்சிகளுக்கு டிராக்டர்கள் வழங்கியும் பயனில்லாமல் உள்ளது.
இது குறித்து ஊராட்சி தலைவர்கள் கூறியதாவது: மாநகராட்சி, நகராட்சிகள் ஒட்டியுள்ள ஊராட்சிகளில் மக்கள் தொகை மிக அதிகம். அதுபோன்ற நகரை ஒட்டியுள்ள ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை பணி பெரும் சவாலாகவே இருக்கிறது. இவற்றை முறையாக அப்புறப்படுத்த போதிய பணியாளர்கள், வாகனவசதி இல்லாததால், மாதம் ஒருநாள் அல்லது முக்கிய நாட்களில் தனியார் பணியாளர்களை தினக்கூலிக்கு அழைத்து சுத்தம் செய்து வந்தனர்.
இந்நிலையில், ஊராட்சிகளில் திடக்கழிவுகளை மேலாண்மை செய்ய தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் 70 சதவீத பங்களிப்புடனும் 15-வது நிதிக்குழு மானியத்தில் 30 சதவீத பங்களிப்புடனும் மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளுக்கு 3 மாதங்களுக்கு முன்பு டிராக்டர்கள் வழங்கப்பட்டன. ஆனால், அவை பல ஊராட்சிகளில் காட்சிப்பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராம ஊராட்சிகள், நகரத்துக்கு இணையாக வளர்ந்துள்ளன. ஆனால்,சுகாதார வசதி மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. ஊராட்சியில் உள்ள குப்பைகளை அகற்ற கோடிக்கணக்கில் செலவு செய்து டிராக்டர்கள் வாங்கி கொடுத்தும் அவை பயன்பாட்டுக்கு வரவில்லை. அதிகாரிகளின் அலட்சியப்போக்கே இதற்கு காரணம் என தெரிகிறது.
மக்களின் வரிப்பணம் வீணாவது பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. அதே நேரம் டிராக்டர் விற்ற நிறுவனத்துக்கு அவசர, அவசரமாக பணத்தையும் செலுத்தி விட்டனர். அதில் காட்டும் ஆர்வத்தை டிராக்டரை செயல்படுத்துவதிலும் காட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த பிரச்சினையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு விரைந்து டிராக்டர்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. இது குறித்து மாவட்ட திட்ட இயக்குநர் இந்து பாலாவிடம் கேட்டபோது, அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.