பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு புதிய கார் வழங்கிய மநீம தலைவர் கமல்ஹாசன்

கார் வழங்கிய மநீம தலைவர்
கார் வழங்கிய மநீம தலைவர்
Updated on
2 min read

சென்னை: கோவையைச் சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கார் வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி, முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமி போல கோயம்புத்தூரில் முதன்முறையாக தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்தவர் ஷர்மிளா. பேருந்து ஓட்டுநராக வரவேண்டுமெனும் தன்னுடைய கனவிற்காக உழைத்து, சவாலான பணியை திறம்படச் செய்து வந்தார். அதற்காகப் பல்வேறு தரப்பின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார்.

தன் வயதையொத்த பெண்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஷர்மிளா குறித்த சமீபத்தைய விவாதம் என் கவனத்திற்கு வந்தது. மிகுந்த வேதனை அடைந்தேன். ஷர்மிளா ஓர் ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல. பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவரென்பதே என் நம்பிக்கை.

கமல் பண்பாட்டு மையம் தனது பங்களிப்பாக ஒரு புதிய காரை ஷர்மிளாவிற்கு வழங்குகிறது. வாடகைக் கார் ஓட்டும் தொழில்முனைவராக தனது பயணத்தை ஷர்மிளா மீண்டும் தொடரவிருக்கிறார். ஆண்டாண்டு காலமாய் அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தங்கள் தளைகளை உடைத்து தரணி ஆள வருகையில், ஒரு பண்பட்ட சமூகமாக நாம் அவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்."இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

முன்னதாக, திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி கடந்த 23ம் தேதி கோவைக்கு வந்தார். கோவையில் தனியார் பேருந்து பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பீளமேடு வரை பேருந்தில் பயணித்தார். பின்னர், ஷர்மிளாவுக்கு கடிகாரம் பரிசளித்தார்.

சந்திப்பு நடைபெற்ற சில மணி நேரத்தில், தான் பணியில் இருந்து விலகிவிட்டதாக ஷர்மிளா தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “எங்கள் பேருந்தில் பெண் நடத்துநர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கனிமொழியிடம் டிக்கெட் கேட்டு, கடினமாக நடந்துகொண்டார். அவரிடம் அப்படி கேட்காதீர்கள் என்று நான் தெரிவித்தேன். கனிமொழியின் உதவியாளர் டிக்கெட் கட்டணமாக ரூ.120 அளித்தார். பின்னர், காந்திபுரத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு, அலுவலகம் சென்று இதைத் தெரிவிக்கலாம் என்று சென்றேன். அப்போது பேருந்தின் உரிமையாளர், எனக்கு ஆதரவாகப் பேசவில்லை. நான் கிளம்பிச் சென்றுவிட்டேன்” என்றார்.

பேருந்து நிறுவன மேலாளர் ரகு கூறும்போது, “ஓட்டுநர் ஷர்மிளா ஊடகங்களிடம் தவறான தகவலைத் தெரிவித்துள்ளார். வேலையைவிட்டு விலக அவர் முடிவு செய்துவிட்டார். விளம்பரத்தோடு விலக வேண்டும் என்றஉள்நோக்குடன் இப்படி தெரிவித்துள்ளார்” என்றார்.

பேருந்து நடத்துநர் அன்னத்தாய் கூறும்போது, “ஷர்மிளா தெரிவித்தது பொய். `யாராக இருந்தால் என்ன, டிக்கெட் வாங்க வேண்டும்' என்பது போன்ற வார்த்தைகளை நான் பயன்படுத்தவே இல்லை” என்றார். பேருந்து நிறுவன உரிமையாளர் துரைகண்ணன் கூறும்போது, “நான் ஷர்மிளாவை வேலைக்கு வேண்டாம் என சொல்லவில்லை. மீண்டும் அவர் பணியில் சேரலாம்” என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in