Published : 26 Jun 2023 12:33 PM
Last Updated : 26 Jun 2023 12:33 PM
சென்னை: சென்னையில் போதை பொருட்கள் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள 1,215 கிலோ கஞ்சா, மெத்தம்பெட்டமைன் மற்றும் ஹெராயின் போதைப் பொருட்கள் நீதிமன்ற ஆணையின்பேரில் எரித்து அழிக்கப்பட்டன.
இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "போதைப் பொருள் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா, ஓபியம், ஹெராயின், கொக்கையின், மெத்தம்பெட்டமைன், கெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை ஆபத்து கருதியும், கைப்பற்றப்பட்ட பொருட்களை வைப்பதற்கான இட வசதி கருதியும், NDPS சட்டத்தின் கீழ் கைப்பற்றப்பட்ட போதை பொருட்களை உரிய முறைப்படி அழிக்க சென்னை பெருநகர காவல் துறை குழுக்களை அமைத்து அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்பேரில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் NDPS சட்டத்தின் கீழ் கைப்பற்றப்பட்ட போதை பொருட்களை அழிக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், போதைப்பொருள் பழக்கத்தை ஒடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வடக்கு மண்டல இணை ஆணையாளர் ரம்யா பாரதி, தலைமையில், மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் நாகஜோதி மற்றும் தடய அறிவியல் துறை துணை இயக்குநர் விசாலாட்சி ஆகியோரை உறுப்பினராக கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இதற்கு முன்னர் 25.06.2022 அன்று ஜி.ஜே, மல்டிகிளேவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மூலம் முதன் முறையாக 1,075 கிலோ எடை கொண்ட கஞ்சா போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டது. மேலும் 08.10.2022 அன்று இரண்டாவது முறையாக 845 கிலோ கஞ்சா போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டன.
இக்குழுவினரின் மேற்பார்வையின் கீழ் சம்பந்தப்பட்ட புலனாய்வு அதிகாரிகள் NDPS சட்டத்தின் பிரிவு 52A-ன் கீழ் போதைப் பொருள் வழக்குகளுக்கான (NDPS) சிறப்பு நீதிமன்றங்களில் உறுதிமொழி கோப்பு தாக்கல் செய்து, உரிய மாதிரிகள் (Samples), புகைப்படங்கள் (Photos) எடுக்கப்பட்ட பின்னர், நிலுவையிலுள்ள 41 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 996.15 கிலோ போதைப்பொருட்களை அழிக்க உத்தரவு பெறப்பட்டது. மேலும், போதைப் பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து மேல்முறையீட்டு காலம் முடிந்த 84 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 218.825 கிலோ போதைப்பொருட்களை அழிக்கவும் உத்தரவு பெறப்பட்டது.
அதன்பேரில், இன்று (26.06.2023) காலை, செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள G.J மல்டிகிளேவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மூலம் ஆபத்தான ரசாயன பொருட்களை எரிக்கும் இடத்தில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், முன்னிலையில், நீதிமன்றங்களின் ஆணைகளின் படி மொத்தம் 125 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 1213 கிலோ 685 கிராம் கஞ்சா, 1.25 கிலோ மெத்தம்பெட்டமைன், மற்றும் 40 கிராம் ஹெராயின் என மொத்தம் 1,215 கிலோ போதைப்பொருட்கள், சிறப்பு குழுவினர் மூலம் ஆய்வு செய்து எடை சரிபார்க்கப்பட்டு, 1,000 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. அழிக்கப்பட்ட போதை பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2 கோடி ஆகும்.
சென்னை பெருநகர காவல் துறையினரால் கடந்த ஒரு வருடத்தில் 3 முறை ரூ.4.5 கோடி மதிப்புள்ள மொத்தம் 3,135 கிலோ போதை பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலே அதிகளவில் போதைப்பொருட்களை அழித்ததில் சென்னை பெருநகர காவல் துறை முன்னோடியாக உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT