Published : 26 Jun 2023 06:04 AM
Last Updated : 26 Jun 2023 06:04 AM

உச்சபட்ச நேரங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கான 20% மின்கட்டண உயர்வை திரும்ப பெற காங், கம்யூ. கட்சிகள் கோரிக்கை

சென்னை: உச்சபட்ச நேரங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கான 20 சதவீதம் மின்கட்டண உயர்வை மத்தியஅரசு திரும்பப் பெற வேண்டும்என காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

இது தொடர்பாக அக்கட்சிகளின் மாநில தலைவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: தமிழகத்தில் காலை, மாலை வேளைகளில் 6 முதல் இரவு 10 மணி வரையிலான 5 மணி நேரத்தை அதிக மின் பயன்பாடு நேரமாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், மின் தேவை அதிகம் உள்ள இத்தகைய நேரங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு மின் கட்டணத்தை கூடுதலாக வசூலிக்க வேண்டும் என மத்திய மின்துறை அமைச்சகம் திடீரென அறிவித்துள்ளது.

மத்திய அரசின் கட்டண உயர்வு ஏழை, நடுத்தர மக்களுக்கு கடும் சுமையை ஏற்படுத்தும். பொதுமக்கள் மீது திணிக்கப்பட்ட கடும் தாக்குதலாகவே இதை கருதவேண்டும். மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்துவதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும். இந்த மின் கட்டண உயர்வை உடனடியாக கைவிட வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: உச்சபட்ச மின்சார பயன்பாட்டு நேரத்தில், மின் நுகர்வோர் உபயோகிக்கும் மின்சாரத்துக்கு, வழக்கமாக உள்ள கட்டணத்துடன் 20 சதவீதம் கூடுதல் கட்டணத்தை மத்திய அரசு விதித்துள்ளது. அதன்படி, காலை 6 முதல் 10 மணி வரையிலும், மாலை 6 முதல் இரவு 10 மணி வரையிலும் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

இது கொள்ளையைவிட கொடியது. இது வாக்களித்த மக்களுக்கு இழைக்கபடும் அநீதியாகும். மக்களுக்கு விரோதமான இந்த மின் கட்டண உயர்வை வன்மையாக கண்டிக்கிறோம். இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: நாடு முழுவதும் மின்சாரம்அதிகமாக பயன்படும் உச்சபட்ச நேரங்களில் மின்கட்டணம் 20 சதவிதம் உயர்த்தப்படும் என மத்தியஅரசு அறிவித்திருக்கிறது. இதற்காக மின்சார விதிகளில் திருத்தம்கொண்டு வந்துள்ளது. அதன்படி,2024 ஏப்ரல் முதல் வணிக பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கும், 2025 ஏப்ரல் முதல் வீடுகளுக்கான மின் இணைப்புகளுக்கும் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.

உச்சபட்ச நேரத்துக்கு ஒரு வகையான மின்சார கட்டணம், சாதாரண நேரத்துக்கு ஒரு வகையானமின்சார கட்டணம் என்பது ஏற்புடையது அல்ல. இதனால், ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே, மத்திய அரசுஅறிவித்துள்ள 20 சதவீத கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மின்சார விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தையும் கைவிட வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x