

சென்னை: தனது கணவருக்கு எதிராக மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வருவதாகக் குறிப்பிட்டு, அவர் மீது குற்றம் சுமத்தி அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.
அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி, அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் மேகலா தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தனது அரசியலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் என்று கருதிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, என் கணவருக்கு எதிராக வெறுப்பை வளர்த்துக் கொண்டுள்ளார். இதனால், மத்திய அரசின் விசாரணை அமைப்புகள், என் கணவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்று 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அண்ணாமலை பேசி வருகிறார்.
அதேநேரம், கைது செய்யப்பட்ட என் கணவர் செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்க எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை முறையாகப் பரிசீலிக்காமல், அவரை நீதிமன்றக் காவலில் வைத்து பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதமானது. எனவே, அவரை விடுவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறை பதில்
இதற்கிடையில், ஆட்கொணர்வு மனுவுக்கு அமலாக்கத் துறை தாக்கல் செய்த பதில் மனுவில், “அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜூன் 14-ம் தேதி அதிகாலை கைது செய்யும் முன், சட்ட விரோதக் காவலில் வைக்கவில்லை.
சாட்சிகளைக் கலைத்து, ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு இருந்ததால்தான் அவர் கைது செய்யப்பட்டார். இதுவரை திரட்டப்பட்ட ஆதாரங்களில் இருந்து, அவர் சட்டவிரோத பணப் பரிமாற்றக் குற்றம் புரிந்துள்ளார் என நம்ப போதுமான காரணங்கள் உள்ளன.
அவரைக் கைது செய்தபோது, அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன. செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், இதுவரைஅமலாக்கத் துறை அவரை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை. எனவே, காவலில் வைத்து விசாரிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.