Published : 26 Jun 2023 06:53 AM
Last Updated : 26 Jun 2023 06:53 AM

மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென சரிவு: குறுவை நெற்பயிரை காப்பாற்ற முடியுமா? - காவிரி டெல்டா விவசாயிகள் கவலை

தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டை பகுதியில் குறுவை நெற்பயிர் நடவுப் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயத் தொழிலாளர்கள். படம்: ஆர்.வெங்கடேஷ்

தஞ்சாவூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து போதியளவு நீர்வரத்து இல்லாததால், மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென சரிந்து வருகிறது. இதனால், குறுவை நெற்பயிரை காப்பாற்ற முடியுமா என காவிரி டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கேரளம், கர்நாடக மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தமிழகத்துக்கு வரும் நீர், மேட்டூர் அணையில் தேக்கி வைக்கப்பட்டு, டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நிகழாண்டு ஜூன் 12-ம் தேதி காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். அன்று அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 867 கன அடியாகவும், நீர்மட்டம் 103 அடியாகவும் இருந்தது. அன்று முதல் அணையிலிருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 13 நாட்களில் 11 அடி குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 94 அடியாக உள்ளது. நீர்வரத்து 223 கனஅடியாக உள்ள நிலையில், தொடர்ந்து 10 ஆயிரம் கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது.

டெல்டா மாவட்ட பாசனத்துக்காக கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கல்லணைக் கால்வாய் ஆற்றில் பல இடங்களில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. அதனால், அதில் விநாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் மட்டுமே நீர் திறக்கப்படுவதால், பல்வேறு கிளை வாய்க்கால்களில் இன்னும் நீர் திறக்கப்படவில்லை. இதனால் இந்த பாசனப் பகுதிகளில் இன்னும் குறுவை சாகுபடி தொடங்கப்படாமல் உள்ளது.

மேட்டூர் அணை திறப்பை நம்பி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் முழுமூச்சாக இறங்கியுள்ளனர். நிகழாண்டு குறுவை சாகுபடி இலக்காக 5.20 லட்சம் ஏக்கரை வேளாண் துறை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. இதற்கேற்ப, குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டமும் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரை டெல்டாவில் 2.50 லட்சம் ஏக்கரில் மட்டுமே நெற்பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளதாலும், அணையின் நீர்மட்டம் மளமளவென சரிந்து வருவதாலும் குறுவை நெற்பயிரை காப்பாற்ற காவிரியில் போதிய நீர் வருமா என டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மாதாந்திர நீர் பங்கீடு: எனவே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு கர்நாடக அரசு தர வேண்டிய மாதாந்திர நீர்ப் பங்கீட்டை, தமிழக அரசு உடனடியாக காலம் தாழ்த்தாமல் கேட்டுப்பெற, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை அணுக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து நீர்வள ஆதாரத் துறை பொறியாளர்கள் கூறியது:

கேரளம், கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெரிய அளவில் பெய்யவில்லை. இருப்பினும் ஆகஸ்ட் இறுதி வரை அந்த மழை இருக்கும். தற்போதைய நிலையில், மேட்டூர் அணையின் நீர் இருப்பையும், டெல்டாவில் அவ்வப்போது பெய்யும் மழை நீரையும், பம்பு செட்டுகளின் நீரையும் வைத்து குறுவை சாகுபடியை ஓரளவுக்கு சமாளித்து விட முடியும் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x