Published : 26 Jun 2023 07:01 AM
Last Updated : 26 Jun 2023 07:01 AM
கோவை: இங்கிலாந்துக்கு மேற்படிப்புக்காக சென்ற கோவையை சேர்ந்த மாணவர் பர்மிங்ஹாம் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகையை சேர்ந்தவர் சிவகுமார். கடந்த சில ஆண்டுகளாக தனது குடும்பத்துடன் கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள். மூத்த மகன் ஜீவந்த்(25) கோவையில் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் பகுதியில் உள்ள ஆஸ்டன் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்துவந்தார்.
இந்நிலையில், ஜீவந்த் உயிரிழந்துவிட்டதாக பல்கலை. நிர்வாகம் சார்பில் கோவையில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், மகன் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரித்துள்ளனர்.
இதுகுறித்து, ஜீவந்த் குடும்பத்தினர் கூறியதாவது: கடந்த 20-ம் தேதி மாலை பல்கலை. அருகே உள்ள நூலகத்துக்கு ஜீவந்த் சென்றுள்ளார். இரவு 9.30 மணியளவில் உணவு அருந்த நண்பர்கள் அழைத்தபோது, தான் பிறகு வருவதாக கூறியுள்ளார். நள்ளிரவு கடந்தும் அவர் விடுதிக்கு திரும்பவில்லை. நண்பர்கள் தொடர்பு கொள்ள முயன்றபோது செல்போன் அணைக்கப்பட்டிருந்தது. புகாரின்பேரில் போலீஸார் தேடி வந்த நிலையில், 21-ம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் வெஸ்ட் மிட்லண்ட்ஸ் போலீஸாருக்கு பர்மிங்ஹாம் கால்வாயில் ஒரு இளைஞர் தண்ணீரில் அடித்து வரப்பட்டுள்ளதாகவும் மயங்கிய நிலையில் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர்தான், உயிரிழந்தவர் ஜீவந்த் என உறுதி செய்யப்பட்டது.
ஜீவந்த் நன்றாக படிக்கக்கூடியவர். ஏப்ரலில்தான் கோவை வந்துவிட்டு சென்றார். சம்பவம் நடப்பதற்கு முன்தினம் பெற்றோரிடம் போனில் பேசினார். செப்டம்பரில் படிப்பு முடிய இருந்தது. அவரது இறப்பில் சந்தேகம் உள்ளது. இந்திய தூதரகம் மூலம் சடலத்தை கோவைக்கு கொண்டு வரும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம் என்றனர். சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீஸாரும் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT