

ஈரோடு: தூய்மைப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்கும் அரசின் முடிவைக் கைவிடக் கோரி, ஈரோடு மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தினமும் 250 மெ.டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இப்பணியில் 500-க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் மற்றும் 1,200-க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாநகராட்சியின் தூய்மைப் பணி உள்ளிட்ட பணிகளை தனியாருக்கு வழங்கு வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 23-ம் தேதி முதல் தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன் தினம் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில், மூன்றாவது நாளான நேற்றும் தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நிரந்தரப் பணியாளர்கள் மட்டும் தூய்மைப் பணியில் ஈடுபட்ட நிலையில், நகரின் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் தேங்கி, சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டது.
தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் குறித்து தொழிற்சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி கூறியதாவது: தூய்மைப் பணிகளை தனியாருக்கு விடுவதைக் கண்டித்து 4- வது நாளாக இன்றும் (26-ம் தேதி) தூய்மைப்பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
தூய்மைப் பணியாளர் களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று காலை மாநகராட்சி அலுவல கத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில், எம்பி-க்கள் அ.கணேச மூர்த்தி, கே.சுப்பராயன், அந்தியூர் செல்வராஜ், ஈரோடு கிழக்கு எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் பல்வேறு தொழிற்சங்க தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் நடக்கும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிடும், என்றார்.