Published : 26 Jun 2023 04:05 AM
Last Updated : 26 Jun 2023 04:05 AM

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுகவுடன் இணைய வாய்ப்பு: ஜெயக்குமார் கருத்து

டி.ஜெயக்குமார் | கோப்புப் படம்

சென்னை: திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள், அதிலிருந்து விலகி அதிமுகவுடன் இணைய வாய்ப்புள்ளதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக எம்ஜிஆர் மன்றம் சார்பில் புழல் பகுதியில் எம்.ஜி.ஆர்-மன்ற திறப்பு மற்றும் கணினி பயிற்சி மையம், இ-சேவை மையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் முறையாக ஆட்சி நடத்த முடியாத முதல்வர் ஸ்டாலினால், பிஹாரில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒன்றும் செய்துவிட முடியாது.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ளன. அரசியலில் யாரும் நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை. இப்போது பலர் கூடியுள்ளனர். இது தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு கெட்ட பெயர் உள்ளது. இந்த ஆட்சி தானாகவே விழுந்துவிடும்.

டெல்லி சென்றுள்ள ஆளுநர், அங்கு ஒரு வாரம் தங்குவார், உள்துறை அமைச்சரை சந்திப்பார் என்று கூறப்படுகிறது. இந்த ஆட்சி ரத்து செய்யப்பட்டால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ஏற்கெனவே, கருணாநிதி ஆட்சி டிஸ்மிஸ் ஆகியுள்ளது. இவர்களுக்கு டிஸ்மிஸ் ராசி உண்டு. அதனால் இந்த ஆட்சி டிஸ்மிஸ் ஆக வாய்ப்புள்ளது.

தேர்தல் நெருங்க நெருங்க, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, பல கட்சிகள் அதிமுக தலைமையிலான கூட்டணியில் சேருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. அதிமுகவுடன் இணையும் கட்சிகள் தொடர்பான விவரங்களை ரகசியமாக வைத்திருக்கிறோம். அமலாக்கத் துறை சோதனையால் திமுக அமைச்சர்கள் அச்சத்தில் உள்ளனர்.

மக்களவைத் தேர்தல் முடியும்வரை மாதந்தோறும் ஒரு அமைச்சர் கைது செய்யப்படுவார். அமலாக்கத் துறையின் பார்வையில் இருந்து செந்தில் பாலாஜியும், மற்ற அமைச்சர்களும் தப்பிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x