Published : 26 Jun 2023 04:10 AM
Last Updated : 26 Jun 2023 04:10 AM

மதுரை மாநகராட்சி கூட்டங்களை அரசியல் மேடையாக்கும் கவுன்சிலர்களுக்கு கடிவாளம் போடப்படுமா?

மதுரை: மதுரை மாநகராட்சி கூட்டங்களில் வார்டு பிரச்சினைகளை பற்றி சுருக்கமாக கூறாமல், பொதுக் கூட்ட மேடையில் பேசுவது போல சொற்பொழிவாற்றும் கவுன்சிலர்கள், மண்டலத் தலைவர்களுக்கு மேயர் ‘கடிவாளம்’ போடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சி கூட்டம், மேயர் இந்திராணி தலைமையில் இன்று காலை நடைபெறுகிறது. புதிய ஆணையர் பிரவீன்குமார் முதல் முறையாக இதில் பங்கேற்கிறார். அவர் ஆணையராக பொறுப்பேற்ற நாளில் இருந்து காலை முதல் இரவு வரை அதிகாரிகளுடன் வார்டுகளுக்கு சென்று பாதாள சாக்கடை திட்டம், பெரியாறு குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகள், வார்டு பிரச்சினைகளை ஆய்வுசெய்து வருகிறார்.

அனைத்துத் துறை அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். தற்போது மதுரை மாநகராட்சியின் தலையாயப் பிரச்சினைகள் குறித்து அறிந்துகொண்டு, அவற்றுக்கு தீர்வுகாண மாநகராட்சி ஆணையர் முயற்சி எடுத்துள்ளது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

மதுரையில் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டங்களுக்காக தோண்டப்படும் குழிகளால் வெயில் காலத்தில் அனைத்துச் சாலைகளும் குண்டும், குழியுமாகி மக்கள் சிரமப்படுகின்றனர். மழைக் காலத்தில் சாலைகளில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாகி விடுவதால் நிலைமை மேலும் மோசமாகி விடுகிறது.

பெரியாறு குடிநீர் குழாய் பதிப்பு, பாதாள சாக்கடைப் பணிகளை மேற்பார்வையிட அதிகாரிகள் வருவதில்லை. அதனால், ஒப்பந்தத் தொழிலாளர்கள் குழாய்களைப் பதிக்கும் போது பழைய குடிநீர் குழாய்களைச் சேதப்படுத்தி விடுகின்றனர். அதனால், வார்டுகளில் திரும்பிய பக்கமெல்லாம் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது.

மாநகராட்சி ஊழியர்கள் உடைப்பை சரிசெய்யும் வரை குடிநீர் விநியோகத்தை நிறுத்து வதால் தவிக்கும் மக்கள், கவுன் சிலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது அதிருப்தியில் உள்ளனர். இப்பிரச்சினையை கூட்டத்தில் எழுப்ப கவுன்சிலர்கள் திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி 2 நாட்களுக்கு முன்பே மேயரும், மாநகராட்சி ஆணையரும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

இதற்கிடையே மாநகராட்சி கூட்டங்களில் ஒரு சில மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள், வார்டு பிரச்சினைகளை சுருக்கமாக கூறாமல் பொதுக்கூட்ட மேடையில் பேசுவது போல 30 நிமிடம் வரை பேசுகின்றனர். தெற்கு மண்டலத் தலைவர் முகேஷ் சர்மா, மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் சோலை ராஜா மற்றும் சில கவுன்சிலர்கள் 20 நிமிடம் முதல் அரை மணி நேரம் வரை பேசுகின்றனர்.

இதில், முகேஷ்சர்மா, ஒவ்வொரு கூட்டத்திலும் வார்டு பிரச்சினைகளை விட்டுவிட்டு தனக்கும், அதிகாரிகளுக்கும் இடையிலான பிரச்சினைகளை பேசி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. அதனால் தங்கள் வார்டு பிரச்சினைகளை எழுப்ப முடியாமல், மற்ற கவுன்சிலர்கள் தவித்து வருகின்றனர். கடந்த கூட்டத்தில், சில கவுன்சிலர்கள் மேயரிடம் வாக்குவாதம் செய்துவிட்டு கூட்டத்தை விட்டு வெளியேறினர்.

அனைத்து கவுன்சிலர்களும் தங்கள் வார்டு பிரச்சினைகளை எடுத்துரைக்க வாய்ப்பளிக்கும் விதமாக மண்டல, வார்டு பிரச்சினைகளை சுருக்கமாகப் பேச மேயர் இந்திராணி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாய்ப்புக் கிடைக்காத கவுன்சிலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x