

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமான கட்டிடங் களில் அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் சுவர் விளம்பரம் செய்வது அதிகரித்து வருவதை மாவட்ட நிர்வாகம் தடுக்க நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
திண்டுக்கல் நகரில் நெடுஞ் சாலை துறைக்குச் சொந்தமான மேம்பாலங்களில் அரசியல் கட்சிகள் பாகுபாடின்றி விளம்பரங்கள் செய்வது தொடர்கின்றன. ஆனால், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இவற்றை கண்டும் காணாமல் உள்ளனர்.
இதேபோல், திண்டுக்கல்லில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள பழைய நீதிமன்றக் கட்டிட சுற்றுச்சுவர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுற்றுச்சுவர், அரசு அலுவலகக் கட்டிட சுவர்கள் என பல இடங்களில் அரசியல் கட்சியினர் எந்தவித அனுமதியும் பெறாமல் விளம்பரம் செய்வது தொடர்கிறது. இந்த நிலைமை மாவட்டம் முழுவதும் உள்ளது.
அரசுப் பள்ளி சுற்றுச்சுவரை கூட அரசியல் கட்சியினர் விட்டு வைப்பதில்லை. ஆளுங்கட்சியினர் விளம்பரம் செய்யும் நிலையில், அவர்கள் மீது அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. இதனால், மற்ற கட்சியினரும் அரசு சுவர்களை பயன்படுத்துகின்றனர்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுற்றுச் சுவரில், மதுரை மாநாட்டுக்கு அதிமுகவினர் விளம்பரம் செய்தபோது, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து, போலீஸார் அதை தடுத்து நிறுத்தியதுடன், விளம்பரத்தையும் அழித்தனர். இது, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.
இதேபோல், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடங்களில் எழுத்தப்பட்டுள்ள சுவர் விளம்பரங்களை தயவு தாட்சண்யமின்றி அழிக்க முன்வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. அந்தச் சுவர்களில் அரசு திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வுத் தகவல்களை செய்தியாகவோ, ஓவியங்களாகவோ வரையலாம் என திண்டுக்கல் மக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, தேர்தல் நேரத்தில் மட்டும் அரசு சுவர்களில் உள்ள விளம்பரங்கள் அழிக்கப்படுகின்றன. இந்த நடைமுறையை தேர்தல் காலம் மட்டுமல்லாது, ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும். இதனால், நகர் சுத்தமாக காட்சியளிப்பதுடன், கட்சியினரிடையே சுவர்களில் இடம் பிடிப்பதில் ஏற்படும் மோதல்களும் தவிர்க்கப்படும் என்கின்றனர் பொதுமக்கள்.
இதற்கு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, அரசு சுவர்களில் விளம்பரம் எழுதுவதைத் தவிர்க்க அனைத்து கட்சியினரிடமும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும். மீறி செயல்படுபவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.